5 நாளில் 3 மேட்ச் ரத்து.

தலையில் துண்டை போட்ட பாகிஸ்தான் கிரிக்கெட்.. 5 நாளில் 3 மேட்ச் ரத்து.. சாம்பியன்ஸ் டிராபியில் அடி

2025 சாம்பியன்ஸ் கோப்பை தொடங்கி பத்து நாட்கள் மட்டுமே ஆகியிருக்கும் நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் துவண்டு போயுள்ளது. இரண்டு மோசமான விஷயங்கள் அடுத்தடுத்து அரங்கேறி இருப்பதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் அழுத்தத்தில் உள்ளது.

முதலில், 2025 சாம்பியன்ஸ் கோப்பை தொடரை நடத்தும் அணியாக பாகிஸ்தான் இந்த முறை அரையிறுதி வரை முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இந்த முறை தொடர் துவங்கிய ஐந்து நாட்களில் பாகிஸ்தான் அணி தொடரில் இருந்து முதல் அணியாக வெளியேறிவிட்டது. அதாவது, குரூப் சுற்றுடன் பாகிஸ்தான் அணி வெளியேறி உள்ளது.

தனது குரூப் சுற்றின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக தோல்வி அடைந்த பாகிஸ்தான், அடுத்து இந்திய அணிக்கு எதிராக தோல்வி அடைந்தது. பிப்ரவரி 19 அன்று இந்தத் தொடர் துவங்கிய நிலையில், அன்றைய தினம் முதல் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி, 23ஆம் தேதி இந்தியாவை எதிர்கொண்டது.

இந்த ஐந்து நாட்களில் இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டிலும் தோல்வி அடைந்து குரூப் சுற்றுடன் பாகிஸ்தான் வெளியேறிவிட்டது. முதல் ஐந்து நாட்களிலேயே தொடரை நடத்தும் அணி வெளியேறிவிட்டது என்பது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு அழுத்தத்தை ஏற்படுத்தியது.

இந்த சோகம் முடிவுக்கு வரும் முன், அடுத்த ஐந்து நாட்களில் பாகிஸ்தானில் நடைபெற்ற மூன்று போட்டிகள் மழையால் கைவிடப்பட்டு இருக்கின்றன. சுமார் 29 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு சர்வதேச கிரிக்கெட் தொடரை எடுத்து நடத்தி வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு இது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

இனி எதிர்காலத்தில் இது போன்ற தொடர்களை நடத்த முடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இத்தனைக்கும் பாகிஸ்தானில் கிரிக்கெட் தான் பிரதான விளையாட்டாக உள்ளது. மழை பெய்வது நமது கைகளில் இல்லை என்றாலும், மழை விட்டாலும் கூட பாகிஸ்தான் மைதானங்களில் போட்டி நடத்த முடியாத அளவுக்கு அங்கு இருந்த சூழ்நிலைகள் மற்றும் வடிகால் வசதிகள் மோசமாக இருந்தன.

ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதவிருந்த போட்டியும், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் மோதவிருந்த போட்டியும் மழையால் டாஸ் கூட போடப்படாத நிலையில் கைவிடப்பட்டன. இந்த இரண்டு போட்டிகளின் போதும் மழை அதிக அளவில் பெய்தது. ஆனால், ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய போட்டியில் மோசமான காட்சிகள் அரங்கேறின.

அந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் பேட்டிங் செய்து முடித்து, ஆஸ்திரேலியா சேஸிங் செய்தது. சுமார் 62 ஓவர்கள் ஒட்டுமொத்தமாக வீசப்பட்ட நிலையில் அரை மணி நேர மழையின் காரணமாக போட்டி கைவிடப்பட்டது. அந்தப் போட்டியில் சுமார் 30 நிமிடங்கள் மழை பெய்ததற்குப் பிறகு மைதானம் குளம் போல மாறியது.

முழு மைதானத்தையும் உறைகளால் மூடி இருந்தால் இந்தப் பிரச்சனை வந்திருக்காது. ஆனால், அரைகுறையாக மூடப்பட்ட மைதானத்தின் உறைகள் நீக்கப்பட்டபோது அதிலிருந்து நீர் மீண்டும் ஆடுகளத்திலேயே வெளியே தேங்கியது. மேலும், மைதானத்தின் அவுட்ஃபீல்டு பகுதியில் வடிகால் வசதிகள் படுமோசமாக இருந்தன. அதைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இவ்வாறாக முதல் ஐந்து நாட்களில் தொடரிலிருந்து வெளியேறிய பாகிஸ்தான் அடுத்த ஐந்து நாட்களில் மூன்று போட்டிகளை மழையால் நடத்த முடியாமல் சோதனையை சந்தித்து இருக்கிறது.

Previous articleபாகிஸ்தான் அணிக்கு உதவ தயார்.. யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் சிங் அறிவிப்பு.. வசீம் அக்ரம் மீது சாடல்
Next articleஇந்திய அணியுடன் செமி பைனலில் மோதப் போவது ஆஸ்திரேலியா-வா?