“6 பாகிஸ்தான் வீரர்களை பலி கொடுக்க நல்ல நேரம்” முன்னாள் வீரரால் பாகிஸ்தான் அணியில் வெடித்த சர்ச்சை

“6 பாகிஸ்தான் வீரர்களை பலி கொடுக்க நல்ல நேரம்” முன்னாள் வீரரால் பாகிஸ்தான் அணியில் வெடித்த சர்ச்சை

2024 டி20 உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்றுடன் பாகிஸ்தான் அணி வெளியேறியதை அடுத்து முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் பல்வேறு அதிரடி கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் இயக்குனரும், முன்னாள் வீரருமான முகமது ஹபீஸ் சர்ச்சைக்குரிய ட்வீட் ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.

அதில் பாகிஸ்தான் அணி டி20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியதை நேரடியாக குறிப்பிடாமல், பக்ரீத் வருவதை முன்னிட்டு ஆடுகளை குர்பானி கொடுக்க வேண்டும் என்பது போல ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். குர்பானி என்றால் பலி கொடுப்பது என்ற அர்த்தம். அந்த வகையில் முகமது ஹபீஸ் தனது பதிவில், “பலி கொடுக்க வேண்டிய நல்ல நேரம் வந்துவிட்டது” என குறிப்பிட்டு ஆறு ஆடுகளின் படங்களை பதிவிட்டு இருக்கிறார்.

அதாவது பாகிஸ்தான் அணியில் ஆறு வீரர்களை பலிகடாவாக்கி அணியில் இருந்து நீக்க வேண்டும் என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறார். இந்த பதிவு சமூக ட்விட்டர் வலை தளத்தில் மட்டும் 21 லட்சம் நபர்களால் பார்க்கப்பட்டு இருக்கிறது. எந்த ஆறு வீரர்களை பலிகடாவாக்க வேண்டும் என முகமது ஹபீஸ் குறிப்பிடுகிறார் என்பது தெளிவாக தெரியவில்லை.

ஆனால், ஆங்கிலத்தில் (GOAT) கோட் என சிறந்து வீரர்களை குறிப்பிடுவதுண்டு. அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர்கள் என கூறிக் கொள்ளும் ஆறு வீரர்களை நீக்க வேண்டும் என மறைமுகமாக அவர் குறிப்பிட்டிருப்பதாகவும் சிலர் கூறுகின்றனர். குறிப்பாக கேப்டன் பாபர் அசாம், வேகப் பந்துவீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடி, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான், மற்றொரு வேகப் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரௌஃப், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ஃபாக்கர் ஜமான் ஆகிய ஐந்து வீரர்களை நீக்க வேண்டுமென ஏற்கனவே சில முன்னாள் வீரர்கள் குறிப்பிட்டிருந்தனர். அதைத்தான் முகமது ஹபீசும் சொல்லி இருக்கிறார் என்கின்றனர் ரசிகர்கள்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் தலைவர் மொஹ்சின் நக்வியும், பாகிஸ்தான் அணியின் தோல்வியால் சிக்கலில் இருப்பதாக கூறப்படுகிறது. அவரது பதவியும் விரைவில் பறிக்கப்படலாம் என கூறப்படுகிறது. அப்படி நடந்தால் பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர்கள் நடவடிக்கையில் இருந்து தப்பவும் வாய்ப்பு உள்ளது.