டிராவிட் உருவாக்கும் புதிய கிரிக்கெட் சாம்ராஜ்யம் – அடுத்த தலைமை பயிற்சியாளராவாரா ?

இந்திய கிரிக்கெட் அணி என்றாலே சட்டென நினைவுக்கு வரும் ஜாம்பவான்களில் ஒருவர் ராகுல் டிராவிட். வீரர், கேப்டன், விக்கெட் கீப்பர் என பல ரோல்களை இந்திய அணிக்காக கச்சிதமாக செய்து கொடுத்தவர். சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற பிறகு ஜூனியர் அணியை கட்டமைக்கும் பணியை செய்தார். தொடர்ந்து தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குனராக இயங்கி வரும் அவர் தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.

டிராவிட் கடந்து வந்த பாதை!

1973-ஆம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் பிறந்த ராகுல் டிராவிட், 1996-ஆம் ஆண்டு ஏப்ரல் 3-ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்திய அணிக்கான ஒருநாள் போட்டியில் களமிறங்கினார். அன்று தொடங்கிய அவரது ஆட்டம் 2012 வரை தொடர்ந்தது. இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் சவுரவ் கங்குலி எனும் இரண்டு பிரமாண்டங்களுக்கு இடையே நம்பிக்கை நட்சத்திரமாய் ஜொலித்தவர்தான் ராகுல் டிராவிட். ஒரு போட்டியில் சச்சினுடன் கைகோத்தும், அடுத்த போட்டியில் கங்குலியுடன் ஜோடி சேர்ந்தும் இந்திய அணிக்காக கடுமையாக போராடியவர்.

இதனால் இவருக்கென ஒரு ரசிகர்கள் கூட்டம் சத்தமின்றி இருந்தது. இதேபோன்று இவரது பேட்டிங்கும் சத்தமின்றியே இருக்கும். கிரிக்கெட்டின் ‘பொறுமை நாயகன்’ என டிராவிட்டை கூறலாம். பேட்டிங்கில் மட்டுமின்றி குணத்திலும் டிராவிட் மிகுந்த பொறுமைசாலிதான். டெஸ்ட் போட்டிகளில் இவரது விக்கெட்டை சாய்ப்பது எப்பேர்பட்ட பவுலருக்கும் சிம்ம சொப்பனமாக இருந்தது.

ஆஸ்திரேலிய பவுலர்களைகூட, டிராவிட் அலறவிட்டிருக்கிறார். சர்வதேச அளவில் 164 டெஸ்ட் போட்டிகள், 344 ஒருநாள் போட்டிகள், ஒரு ட்வென்டி ட்வென்டி என விளையாடியுள்ளார்.

விக்கெட் கீப்பிங் டிராவிட்

அணிக்கு வேண்டியதை தட்டாமல் செய்பவர் டிராவிட். 2000-மாவது ஆண்டு வாக்கில் இந்திய அணிக்கு முழுநேர விக்கெட் கீப்பர் இல்லாத நிலையில் கிளவுஸை தன் கைகளில் மாட்டிக் கொண்டு விக்கெட் கீப்பிங் பணியை கவனித்தவர். இந்திய அணிக்காக பாரத்தீவ் பட்டேல், தினேஷ் கார்த்திக், மகேந்திர சிங் தோனி மாதிரியான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் அடையாளம் காணப்படும் வரும் டிராவிட் இந்த ரோலை தொடர்ந்தார். 2003 உலக கோப்பையிலும் விக்கெட் கீப்பராக செயல்பட்ட டிராவிட், பேட்ஸ்மேனாக 10 இன்னிங்ஸில் 318 ரன்களை குவித்தார். அந்த தொடரில் அவரது பேட்டிங் சராசரி 63.60.

 

கேப்டன் டிராவிட்!

கங்குலி கேப்டன் பொறுப்பிலிருந்து விலக இந்திய அணியை வழிநடத்தும் பொறுப்பை கவனித்தார் டிராவிட். அவரது தலைமையின் கீழ் இந்தியா 79 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 42 போட்டிகளில் வென்றுள்ளது. குறிப்பாக ரன்களை சேஸ் செய்யும் போது தொடர்ச்சியாக 14 வெற்றிகளை பெற்று உலக சாதனையை படைத்திருந்தது இந்தியா. கடந்த 2005இல் தோனி, இலங்கை அணிக்கு எதிராக 183 ரன்களை பதிவு செய்திருந்தார். அதற்கு பக்கபலமாக நின்றவர் டிராவிட். மிடில் ஆர்டரில் களம் இறங்க வேண்டிய தோனி முன்கூட்டியே மூன்றாவது பேட்ஸ்மேனாக களம் இறக்கி விளையாட செய்ததும் டிராவிட் தான். அந்த போட்டியில் அவர் தான் கேப்டன்.

2012-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24-ஆம் தேதி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியுடன் ஓய்வினை அறிவித்தார்.

ஓய்வுக்கு பிறகு!

“அடுத்த பதினைந்து ஆண்டுகளுக்கு இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது” என கிரிக்கெட் ரசிகர்கள் நம்பிக்கையுடன் சொல்ல காரணகர்த்தாவாக அமைந்தார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், 19 வயதுக்குட்பட்டோருக்கான முன்னாள் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட். அவர் அப்படி அணிக்குள் என்ன செய்தார்?

கடந்த 2016 முதல் 2019 வரை 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணி மற்றும் இந்திய ஏ அணிக்கு பயிற்சியாளராக அவர் செயல்பட்டுள்ளார். தன் கிரிக்கெட் வாழ்வில் அவர் கற்ற மொத்த பாடத்தையும் இளம் வீரர்களுக்கு பயிற்சியாகவும், டிப்ஸ்களாகவும் அள்ளி வழங்கினார். பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் வீரர்களை பட்டை தீட்டினார். எந்த பந்தை அடிக்க வேண்டும், எந்த பந்தை தடுக்க வேண்டும் என்பது துவங்கி ஒவ்வொரு வீரருக்கும் தேவையான பயிற்சியை கொடுத்தார்.

இந்தியா மட்டுமல்லாது துணை கண்டத்தின் ஆடுகளங்களில் எப்படி ஆடுவது என்பதையும் டிராவிட் சொல்லிக்கொடுக்க அதை கவனமாக கற்றுக்கொண்டனர் இந்தியாவின் இளம் கிரிக்கெட் வீரர்கள்.

இஷான் கிஷன், பண்ட், வாஷிங்டன் சுந்தர், பிருத்வி ஷா, சுப்மன் கில், ஷ்ரேயஸ் அய்யர் மாதிரியான வீரர்கள் ராகுல் டிராவிட் இடம் பயிற்சி பெற்று பட்டை தீட்டப்பட்டவர்கள்.

தலைமை பயிற்சியாளர்?

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் படுதோல்வி அடைந்த போது டிராவிடை ஆஸ்திரேலியா அனுப்ப வேண்டுமென்ற குரல் எழுந்தது. இந்த சூழலில் தற்போது இலங்கைக்கு எதிரான தொடரில் ரவி சாஸ்திரி இங்கிலாந்தில் உள்ள இந்திய அணியுடன் இருப்பதால் தற்காலிகமாக பயிற்சியாளர் பணியை கவனித்து வருகிறார் டிராவிட். பயிற்சியாளராக தனது முதல் தொடரில் அணியை வெற்றி பெற செய்துள்ளார். தனது அனுபவத்தையும், நிதானமான அணுகுமுறையையும் அவர் வீரர்களிடம் கடத்துவதை கேமரா லென்ஸ் வழியே பார்க்க முடிகிறது.

அடுத்த சில நாட்களில் டிராவிட் இந்திய அணியின் முழு நேர பயிற்சியாளராக தொடர வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது. அது நடந்தால் இந்திய அணி புது பாய்ச்சலுடன் சர்வதேச கிரிக்கெட் களத்தில் ஒரு ரவுண்டு வரும்.

நன்றி -புதிய தலைமுறை