ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் அக்டோபர் மாதம் நடக்க உள்ள 7-வது டி20 உலகக் கோப்பைக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) வெளியிட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி நிலவரப்படி அணி தரவரிசை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏற்கனவே எட்டு அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள நான்கு இடங்களுக்கு தகுதி சுற்று நடைபெற உள்ளது.
இந்த தகுதி சுற்றில் வங்கதேசம், இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, நமீபியா, ஓமன் மற்றும் பப்புவா நியூகினியா ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.
தகுதி சுற்றுப்போட்டியில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் உலகக் கோப்பை டி20 போட்டியில் விளையாட தகுதி பெறும். தகுதிச்சுற்றில் A, B, பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன.
இதில் A,B பிரிவி்ல் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதி பெறும்.
சூப்பர்-12 சுற்றில் 12 அணிகள் 2 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் குரூப்-1 பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் அணிகளும் தகுதிச்சுற்றில் ஏ பிரிவில் முதலிடம் பெறும் அணியும், பி பிரிவில் 2-ம் இடம் பெறும் அணியும் இடம் பெறும்.
குரூப்-2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளோடு பி பிரிவி்ல் முதலிடம் பெறும் அணியும், ஏ பிரிவில் 2-ம் இடம் பெறும் அணியும் இடம் பெறும்.
தகுதிச்சுற்று
A பிரிவு: தகுதிச் சுற்றில் ஏ பிரிவில் இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து மற்றும் நமீபியா அணிகள் உள்ளன.
B பிரிவு: பி பிரிவி்ல் வங்கதேசம், ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா மற்றும் ஓமான் அணிகள் பங்கேற்கின்றன. இந்த 8 அணிகளில் 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்குள் செல்லும்.
ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் சர்வதேச மைதானம், அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானம், ஷார்ஜா மைதானம் மற்றும் ஓமான் கிரிக்கெட் அகாடமி மைதானங்களில் நடைபெறுகின்றன.இந்த போட்டிகள் அக்டோபர் 17ம் தேதி முதல் நவம்பர் 14 வரை போட்டிகள் நடைபெற உள்ளன.
#ABDH