சுப்பர் 4 சுற்றின் இறுதிப் போட்டியாக இலங்கை அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றியைப் பதிவுசெய்ததன் மூலம் இவ்வருட ஆசியக் கிண்ணத்தில் இதுவரை சந்தித்த அனைத்து அணிகளுக்கும் எதிரான போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித்தலைவர் பாகிஸ்தான் அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்திருந்தார்.
அதன்படி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணியால் 19.1 ஓவர்கள் முடிவில் 121 ஓட்டங்களை மாத்திரமே எடுக்க முடிந்தது.
பாகிஸ்தான் தரப்பில் பாபர் அசாம் 30 ,முகமது நவாஸ் 26 , முகமது ரிஸ்வான் 14 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன்படி 123 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய இலங்கை அணி 17 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 124 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.
இலங்கை இன்னிங்ஸின் அதிகபட்ச ஓட்டமாக பதும் நிஸ்ஸங்க 48 பந்துகளில் 55 ஓட்டங்களையும், பானுக ராஜபக்ஷ 24 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் ஹரீஸ் ரவூப் மற்றும் முஹம்மட் ஹஸ்னைன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வனிந்து ஹசரங்கவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
அத்துடன் இலங்கை அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான ஆசியக்கிண்ண இறுதிப் போட்டி எதிர்வரும் 11ஆம் திகதி நடைபெறவுள்ளது.