ஆரம்பம் முதலே அபாரமாக ஆடி ஆசிய கிண்ண தொடரின் இன்றைய இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்திய தசுன் ஷானக தலைமையிலான இலங்கை அணி, 8 வருடங்களின் பின்னர் மீண்டும் ஆசிய கிண்ணத்தை கைப்பற்றி சாதனை புரிந்தது.
இந்த போட்டியில் மிகவும் முக்கியமான காரணியாக உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் வர்ணனையாளர்கள் கூறிய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் அசாம் முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணியை அழைத்தார்.
அப்போது களம் இறங்கிய இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் 6 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களை குவிக்க முடிந்தது.
58 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 100 ஓட்டங்களைக் கூட எட்டியிராத நேரத்தில் களத்தில் இறங்கிய பானுக ராஜபக்ஷ மற்றும் வனிந்து ஹசரங்க ஜோடி வேகமான 58 ஓட்டங்கள் இணைப்பாட்டத்துடன் இன்னிங்ஸை ஸ்திரப்படுத்தியதுடன், வனிந்து 21 பந்துகளில் 36 விரைவான ஓட்டங்களைப் பெற்றார்.
போட்டியின் தீர்க்கமான இன்னிங்ஸை ஆரம்பித்த பானுக ராஜபக்ஷ 45 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 71 ஓட்டங்களைப் பெற்றார். 3 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 3 வது அரைச்சதம் அடித்தார்.
அதன்படி, 171 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 147 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
பாகிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக மொஹமட் ரிஸ்வான் 55 ஓட்டங்களையும், இப்திகார் அஹமட் 32 ஓட்டங்களையும் பெற்றனர். வேறு எந்த பாகிஸ்தான் வீரரும் 10 ஓட்டங்களைக் கடக்க இலங்கை பந்துவீச்சாளர்கள் அனுமதிக்கவில்லை.
பந்துவீச்சில் புதுமுகம் பிரமோத் மதுஷான் 4 விக்கெட்டுகளையும், வனிந்து ஹசரங்க 3 விக்கெட்டுகளையும், மஹேஷ் தீக்ஷன மற்றும் சாமிக்க கருணாரத்ன தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அதன்படி 8 வருடங்களின் பின்னர் ஆசிய கிண்ண வெற்றியை அனுபவிக்கும் வாய்ப்பு இலங்கையர்களுக்கு கிட்டியுள்ளது .
தொடரின் நாயகனாக வனிந்து ஹசரங்க டி சில்வாவும்
ஆட்ட நாயகனாக பானுக ராஜபக்சவும் தேர்வாகினர்.
இலங்கை அணிக்கு நமது வாழ்த்துகள் ?