8.4 கோடி வீரரால் சிஎஸ்கேவுக்கு நேர்ந்த கதி.. இந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க.. விளாசிய சுனில் கவாஸ்கர்

8.4 கோடி வீரரால் சிஎஸ்கேவுக்கு நேர்ந்த கதி.. இந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க.. விளாசிய சுனில் கவாஸ்கர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பல கோடிகளை கொடுத்து வாங்கிய உள்ளூர் வீரர் பெரும் ஏமாற்றம் அளித்து இருந்தார். அது போல ஒவ்வொரு ஐபிஎல் அணியும் உள்ளூர் வீரர்களை பல கோடிகள் கொடுத்து பணத்தை வீணடிப்பதை கடுமையாக விமர்சித்து இருக்கிறார் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர்.

2024 ஐபிஎல் தொடருக்கு முன் நடந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8.4 கோடி கொடுத்து சமீர் ரிஸ்வி என்ற உள்ளூர் வீரரை வாங்கியது. அவர் உத்தர பிரதேச டி20 லீக் தொடரில் அதிவேக சதம் அடித்திருந்தார். அவருக்கு ஏலத்தில் கடும் போட்டி இருந்தது. ஒவ்வொரு அணியும் அவரை வாங்க கோடிக்கணக்கில் தொகையை எகிற வைத்தனர். முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை 8.4 கோடி கொடுத்து வாங்கியது.

அத்தனை விலை கொடுத்து வாங்கிய சமீர் ரிஸ்வி கடந்த ஐபிஎல் தொடரில் 5 இன்னிங்ஸ்களில் 51 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவரது மோசமான செயல்பாட்டால் சிஎஸ்கே அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. இந்த நிலையில், உள்ளூர் டி20 தொடர்களில் சிறப்பாக ஆடும் வீரர்களுக்கு கோடிக்கணக்கில் பணத்தை கொட்டிக் கொடுத்து ஐபிஎல் அணிகள் பணத்தை வீணடிப்பதாக முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விளாசி இருக்கிறார்.

இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில், “அண்டர் 19 வீரர்கள் பலரும் முதல் தரப் போட்டிகளில் விளையாடுவதற்கு எப்படி சிரமப்படுகிறார்கள் என்பதை நாம் ஏற்கனவே பார்த்து இருக்கிறோம். ஏனெனில், ஜூனியர் அளவிலான போட்டிகளில் அவர்கள் சந்திக்கும் எதிரணிகளை விட, முதல் தரப் போட்டிகளில் கடினமான எதிரணிகளுக்கு எதிராக அவர்கள் விளையாட வேண்டி இருக்கும்.” என்றார்.

“அதேபோல மாநில அளவிலான டி20 தொடர்களில் சிறப்பாக ஆடும் வீரர்கள் தேசிய அளவிலான சையது முஷ்டாக் அலி தொடரிலோ அல்லது ஐபிஎல் தொடரிலோ அதேபோன்று செயல்பாட்டை அளிக்க முடியாமல் திணறுகின்றனர். ஏனெனில், இங்கு போட்டியின் தரம் மிகவும் அதிகமாக உள்ளது. ஆனால், ஐபிஎல் அணிகளோ மாநில டி20 தொடர்களில் சிறப்பாக ஆடும் வீரர்களுக்கு கோடிகளை கொட்டிக் கொடுத்து வருகின்றன. இது நல்ல விஷயம் இல்லை. இது முற்றிலும் பணத்தை வீணடிக்கும் செயல்.” என்று கூறி இருக்கிறார் சுனில் கவாஸ்கர்.