8.5 கோடி முதல் – நைட் போலர் வரை ,கொட்ரெலின் வாழ்க்கை மாற்றிய ஒரே ஓவர் சோகம்..!
அமீரகத்தில் தொடங்கவிருக்கும் ஐபிஎல்-க்கு பின்னால் அனைத்து அணிகளுக்கும் பல்வேறு சிரமங்கள் இருந்தன. அதாவது டி20 உலகக்கோப்பை தொடரை காரணமாக கூறி அயல்நாட்டு வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறினர். கடைசி நேரத்தில் கூட இங்கிலாந்து வீரர்கள் கிறிஸ் வோக்ஸ், பேர்ஸ்டோ, டேவிட் மாலன் ஆகியோர் விலகியிருந்தனர். இதனால் அயல்நாட்டு வீரர்களின் மவுசு அதிகரித்திருந்தது.
இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த டொமினிக் டிரேக்ஸ், பிடல் எட்வர்ட்ஸ், ரவி ராம்பால் மற்றும் ஷெல்டன் காட்ரெல் ஆகிய 4 நட்சத்திர பவுலர்களை ஒப்பந்தம் செய்து வலைப்பயிற்சி ( நெட் பவுலர்) பவுலர்களாக பஞ்சாப் அணி பயன்படுத்தி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதில் கவனிக்கப்பட வேண்டிய வீரராக சல்யூட் மன்னன் ஷெல்டன் கார்டெல் விளங்குகிறார்.சர்வதேச போட்டிகளில் இவர், தனது கம்பீர சல்யூட்டால் ரசிகர்களை தன் வசம் ஈர்த்தார்.
இந்நிலையில் இவரின் வாழ்க்கை ஒரே ஒரு போட்டியில் தலைகீழாக மாற்றியது. ஷெல்டன் கார்டெல் கடந்தாண்டு முதன் முறையாக ஐபிஎல்-ல் பஞ்சாப் கிங்ஸ் அணியால் 8.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
கடந்தாண்டு ஐபிஎல்-ல் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஒரு ஆட்டத்தில் பஞ்சாப் அணி 223 ரன்களை குவித்தது. இந்த இமாலய இலக்கை ராஜஸ்தான் அணியால் நெருங்க முடியாது என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அதனை சுக்கு நூறாக உடைத்தார் ஆல்ரவுண்டர் ராகுல் திவாட்டியா. 3 ஓவர்களில் 51 தேவையாக இருந்த அந்த போட்டியில் திவாட்டியா, ஷெல்டன் கோட்ரெல் வீசிய 18-வது ஓவரில், யாரும் எதிர்பார்க்காத வகையில் 5 சிக்சர்களை விளாசி மிரட்டினார். ராகுல் திவாட்டியா, ஷெல்டன் பந்துவீச்சில் சிக்ஸர் மழை பொழிந்தார். இது பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
இதனால் 226 ரன்களை எடுத்து ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. இப்போட்டிக்கு பின் ஷெல்டன் கோட்ரெல் அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்டார். அதனால் அந்த சீசன் முழுவதும் அவருக்கு விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்திலும் அவரை அந்த அணி கழட்டி விட்டது. இந்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணி அவரை தற்போது நெட் பவுலராக மீண்டும் அணிக்குள் கொண்டு வந்துள்ளது. 8.5 கோடி ரூபாய்க்கு ஏலம் போன வீரர் ஒரே போட்டியால் நெட் பவுலராக வந்த சம்பவம் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.
வாழ்க்கை இப்படித்தான் விசித்திரங்கள் நிறைந்தது.