9 ஆண்டுகளுக்குப் பின்னர் வீட்டுக்குப் போகப்போகிறேன்- MI சாதனை நாயகன் கார்த்திக்கேயா வின் கதை ? #MI #IPL2022

9 ஆண்டுகளுக்குப் பின்னர் வீட்டுக்குப் போகப்போகிறேன்- MI சாதனை நாயகன் கார்த்திக்கேயா வின் கதை ?
#MI #IPL2022

வாழ்க்கையில் நாங்கள் சாதிப்பதற்காக துணிந்துவிட்டால் எங்கள் சாதனைப் பயணத்தில் வருகின்ற ஏராளமான இக்கட்டுகள் ,இன்னல்கள் கடந்து வெற்றியை நோக்கி பயணப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும் .

வெற்றியை எட்டும் வரை ,வெற்றியை அடையும் வரை இதனை செய்ய மாட்டேன் அல்லது வெற்றி பெற்றால் தான் இதனை செய்வேன் என்று ஒரு குறுகிய இலக்கையாவது வாழ்க்கையில் நாங்கள் வைத்து பயணப்பட்டால் தான் வெற்றியை நாங்கள் எட்ட முடியும் .

அப்படியான ஒரு கதைதான் இது ?

மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியான 8 தோல்விகளை தழுவிக்கொண்டு, ஒன்பதாவது தோல்வியையும் தழுவி விடுமோ என்று எல்லோரும் ஏளனமாக பார்த்துக் கொண்டிருக்க, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய ஓர் அறிமுக வீரர் அற்புதமாக சுழற்பந்து வீச்சில் கலக்கி முதல் வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்கிறார்.

அவர்தான் குமார் கார்த்திகேயா என்று சொல்லப்படும் ஓர் இளம் வீரர் .

கூக்லி, சைனமன், கரம் போல் , நக்கிள் பால் மற்றும் எப்போதாவது ஆஃப் பிரேக்கிலும் பந்து வீசக்கூடியவர்.

ஏற்கனவே ராகுல் சஹார், குருநல் பாண்டியா போன்றோர் இல்லாத நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி இம்முறை சுழற்பந்து வீச்சில் தடுமாறுகிறது .

தமிழக வீரர் முருகன் அஸ்வினை போட்டிகளிலேயே பயன்படுத்திப் பார்த்தும் மும்பை இந்தியன்ஸ் சொல்லிக்கொள்ள தக்க வகையிலான பலன் எதுவும் அந்த அணிக்கு கிட்டவில்லை என்பதுடன் அவர்களின் பிரதானமான தோல்விக்கு காரணமாகவும் அமைந்திருந்தது .

இதன் காரணத்தால்தான் அறிமுக வீரராக கார்த்திகேயா சிங்கை நேற்றைய போட்டியில் களமிறங்கி அதற்கான வெகுமதியையும் பெற்றுக் கொண்டிருக்கிறது மும்பை.

கிரிக்கெட் மோகம் காரணமாக ஒன்பது வருடங்கள் வீட்டுக்குப் போகாமல், மூன்று மாநிலங்கள் அலைந்து கடைசியில் நான்காவது மாநில அணியில் மிகப்பெரிய கேரியர் மைல்கல்லை எட்டச் செய்திருக்கிறது.

மும்பை இந்தியன்ஸின் கடினமான காலங்களை கடந்து ஐபிஎல் சீசனின் எஞ்சிய போட்டிக் காலத்திற்கான அணியில் சேர்க்கப்பட்ட இடது கை சுழற்பந்து வீச்சாளர் குமார் கார்த்திகேய சிங்கின் கதை இது.

காயத்தால் லீக்கில் இருந்து வெளியேறிய முகமது அர்ஷத் கானுக்குப் பதிலாக அவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் கடந்த 4 தினங்களுக்கு முன்னர் இடம்பிடிக்கிறார் .

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்தவர் இந்த குமார் கார்த்திகேயா.

கான்பூரில் உள்ள அன்னா சௌராஹா, சங்கன்வா சாலையில் கார்த்திகேயாவின் குடும்பம் வசித்து வருகிறது.
அவரது தந்தை பாப்பா ஷியாம்நாத் சிங் காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணியில் உள்ளார். தாய் சுனிதா சிங் இல்லத்தரசி.

அவர் தனது மாநிலமான உத்தர திரதேசத்தில் இருந்து கிரிக்கெட்டை தொடங்கினார், ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை. அவரது இளைய சகோதரரும் கிரிக்கெட் விளையாடுகிறார், மேலும் ஜூனியர் பிரிவில் UP அணியை பிரதிநிதித்துவப்படுத்தினார், ஆனால் குமார் கார்த்திகேயாவுக்கு அத்தகைய அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை எனபது ஏமாற்றம் என்பேன்.

குமார் கார்த்திகேயா அண்டை மாநிலமான டெல்லிக்கு செல்கிறார். டெல்லியில் பயிற்சியாளர் சஞ்சய் பரத்வாஜை சந்திக்கும்படி ஒருவர் கூறுகிறார். கவுதம் கம்பீர், உன்முக்த் சந்த், அமித் மிஸ்ரா என பல வீரர்களை உருவாக்கியவர் சஞ்சய் .

அங்கேயும் கடினமாக உழைத்தும் குமார் கார்த்திகேயாவுக்கு பலன் கிட்டவில்லை ‘டெல்லியும் அவர் கனவிலிருந்து விலகியே இருந்தது.

“ஒன்பது வருடமாக ஊருக்குப் போகவில்லை. ஏதாவது வாழ்க்கையில் சாதித்தால் அல்லது வேலை கிடைத்தால்தான் வீட்டுக்குப் போவேன் என்று நினைத்தேன். என் பெற்றோர் என்னை அடிக்கடி அழைப்பார்கள், குறிப்பாக என் அம்மா நிறையத்தடவை அழைப்பார்கள். ஆனால் நான் விடாமுயற்சியில் உறுதியாக இருந்தேன். என் லட்சியம் நிறைவேறாமல் ஊருக்கும் போவதில்லை என சபதம் கொண்டேன் .

இப்போது ஐபிஎல் விளையாடிவிட்டு வீடு திரும்புவேன்.9 வருடங்கள் கடந்து என் லட்சியம் ஈடேறியதால் வீட்டுக்கு போகபோகிறேன் என்கிறார் குமார் கார்த்திக்கேயா ?

நதி போல பல மாநிலங்கள் வழியாக கிரிக்கெட் பயணம் செய்வது குறித்து அவர் கூறியதாவது ?

ரஞ்சி அணியின் தேர்வு சோதனைகளில் குமார் கார்த்திகேயாவாக விளையாடியபோது, ​​அவர் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் மத்திய பிரதேச அணியுடன் மைசூரில் பயிற்சி போட்டியில் விளையாட சென்றார். இங்கு ஒரு போட்டியில் மட்டுமே விளையாடி செயல்திறனை நன்றாக வெளிப்படைத்தி பின்னர் ஒரு நாள் அணியில் தேர்வு செய்யப்படுகிறார்.

நான்கு ஒரு நாள் போட்டிகளில் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து ரஞ்சி அணியில் இடம் பிடித்தார். 2018-19 சீசனில் ரஞ்சியில் அறிமுகமானார் மற்றும் மூன்றாவது போட்டியிலேயே ஹிமாச்சல பிரதேசத்திற்கு எதிரான இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்கள் உட்பட ஒன்பது விக்கெட்டுகளை எடுத்து முத்திரை பதிக்கிறார்.

நடப்பு சீசனிலும், குமார் கார்த்திகேயா, குஜராத் அணிக்கு எதிராக மத்திய பிரதேச அணிக்காக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி, MP அணி காலிறுதிக்கு முன்னேற உதவினார்.

டெல்லியில் இருந்து வந்த குமார் கார்த்திகேயா தற்போது போபாலில் வசிக்கத் தொடங்கியுள்ளார். பயிற்சியாளர் சஞ்சய் பரத்வாஜ் முழு செலவையும் ஏற்கிறார். கிரிக்கெட் விளையாடும் ஆசையில் படிப்பை விட்டுவிட்டு, உத்தரகாண்ட் மாநிலத்தில் இருந்து தொலைதூரக் கல்வி மூலம் 12வது வரை படித்துள்ளார்.

குமார் கார்த்திகேயா ஐபிஎல்-க்கு முன் மும்பை இந்தியன்ஸால் சோதனைக்கு (Trial) அழைக்கப்பட்டதுடன் மற்றும் ஆதரவு அணியில் ( Support Team) தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தற்போது அர்ஷத் காயம் அடைந்ததால், அவருக்கு பதிலாக மும்பை இந்தியன்ஸ் அணியின் பிரதான அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. Playing XI ல் பங்கேற்று மும்பைக்கான முதல் வெற்றியை பரிசளித்திருக்கிறார்.

எல்லோரது வாழ்க்கையும் இப்படித்தான், வாசல் கதவுகள் திறந்து ,செங்கம்பளம் விரித்து உங்களுக்கான வாய்ப்புகள் தேடிவருவதில்லை .

கற்களும் முட்களும் நிறைந்த பாதை வழியே எங்கள் சாதனைப் பயணத்தை நோக்கி இலக்கை எட்டுவதற்காக நாம் முயற்சிக்கவேண்டும் .

கார்த்திகேயா சிங்கை பாருங்கள் ஒன்பது ஆண்டுகள் ஆன போராட்டத்திற்கு இப்போது பலன் கிடைத்திருக்கிறது.

இலக்கை அடையும் வரை வீடு செல்லமாட்டேன் என்று தனக்குத்தானே எடுத்துக்கொண்ட சபதம் இன்று கார்த்திகேயா சிங்கை நம் மத்தியில் ஒரு சாதனை நாயகனாக மிளிர வைத்திருக்கிறது.

வாழ்த்துக்கள்

கார்த்திகேயா சிங் போன்று எங்கள் மத்தியிலும் எத்தனையோ நாயகர்கள் இருக்கிறார்கள்,

முயற்சி -பயிற்சி – வெற்றி ❤️

தி.தரணிதரன்
T.Tharaneetharan
01.05.2022