ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் வெளியீடு
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மறுவாழ்வு அளிக்கும் விதமாக கொண்டு வரப்பட்டது தான் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர். இரண்டு ஆண்டுகள் நடைபெறும் போட்டிகளை வைத்து யார் முதல் 2 இடத்தில் உள்ளார்களோ, அவர்களுக்கு இடையே இறுதிப் போட்டி நடைபெறும்
அப்படி, கடந்த ஆண்டு லண்டனில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை வென்றது
இந்த நிலையில், 2021-23ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், நடப்பு சாம்பியனான நியூசிலாந்தை வங்கதேச அணி வீழ்த்தி அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. இதே போன்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டை வென்ற இந்திய அணி, 2ஆவது டெஸ்ட்டில் தோல்வியை தழுவியது.
இதனால், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஆஷஸ் தொடரை வென்ற ஆஸ்திரேலியா முதலிடத்திலும், இலங்கை அணி 2ஆவது இடத்திலும் உள்ளது. பாகிஸ்தான் அணி 3ஆவது இடத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்காவுடன் தோற்ற இந்திய அணி 55.2 சதவீத புள்ளிகளுடன் 4ஆவது இடத்தில் உள்ளது
ஜோஹன்னஸ்பர்க் டெஸ்டை வென்றதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 50 சதவீத புள்ளிகளுடன் 5ஆவது இடத்தில் உள்ளது. வரலாற்று வெற்றியை பெற்ற வங்கதேச அணி 33.3 சதவீத புள்ளியுடன் 6ஆவது இடத்திலும், 25 சதவீத புள்ளிகளுடன் வெஸ்ட் இண்டீஸ் 7ஆவது இடத்திலும் உள்ளது. நடப்பு உலக சாம்பியனான நியூசிலாந்து அணி 8ஆவது இடத்திலும் உள்ளது. ஆஷஸ் தொடரை இழந்த இங்கிலாந்து 9ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்திய அணி இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றி, 2 போட்டியில் தோல்வி, 2 போட்டிகள் டிரா செய்துள்ளது. ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக இந்தியாவின் 3 புள்ளிகள் குறைக்கப்பட்டது. இந்த தொடரில் ஆஸ்திரேலியா சிறப்பான தொடக்கத்தை பெற்றுள்ளது.
#Abdh