நாங்கள் நினைத்ததை விட ஆடுகளம் மிகவும் வித்தியாசமாக இருந்தது என ராஜஸ்தான் அணி கெப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் முதல் 3 நாட்கள் நடந்த 4 ஆட்டங்களில் 2-வது பேட்டிங் செய்த அணி அதாவது சேசிங் செய்த அணி வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் ரோயல்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் மோதிய நேற்றைய ஆட்டத்தில் தான் முதலில் பேட்டிங் செய்த அணி வெற்றியை பெற்றுள்ளது.
புனேயில் நடந்த இந்த போட்டியில் முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 210 ரன் குவித்தது.
கேப்டன் சஞ்சு சாம்சன் 27 பந்தில் 55 ரன்னும் (3 பவுண்டரி, 5 சிக்சர்) , படிக்கல் 29 பந்தில் 41 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்), ஹெட்மயர் 13 பந்தில் 32 ரன்னும் (2 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். நடராஜன், உம்ரான் மாலிக் தலா 2 விக்கெட்டும், புவனேஸ்வர் குமார், ஷெப்பர்டு தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் ஆடிய ஐதராபாத் அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 149 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் ராஜஸ்தான் 61 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மார்க்ராம் அதிகபட்சமாக 41 பந்தில் 57 ரன்னும் (5 பவுண்டரி 2 சிக்சர்), வாஷிங்டன் சுந்தர் 14 பந்தில் 40 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். யசுவேந்திர சாஹல் 3 விக்கெட்டும் , போல்ட் , பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
இந்த வெற்றி குறித்து ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியதாவது:-
நாங்கள் நினைத்ததை விட இந்த ஆடுகளம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. பிச்சுக்கு ஏற்ற வகையில் வேகப்பந்து வீரர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர்.
நீண்ட கால இலக்கு எதுவும் இல்லை. இயன்ற அளவுக்கு அணியின் வெற்றிக்கு பங்களிக்க வேண்டும். அணியின் உரிமையாளர்கள் எங்களை நம்புகிறார்கள். நாங்களும் அதற்கு ஏற்ற வகையில் திறமையை வெளிப்படுத்துவோம்
தோல்வி குறித்து ஐதராபாத் அணி கேப்டன் வில்லியம்சன் கூறும்போது, “தொடக்கத்தில் நாங்கள் நன்றாகவே பந்து வீசினோம். கடைசியில் ரன்களை கொடுத்து நெருக்கடிக்கு ஆளானோம். பேட்டிங்கில் நாங்கள் கற்க வேண்டி உள்ளது. ராஜஸ்தான் அணி வீரர்கள் அனைத்து வகையிலும் சிறப்பாக செயல்பட்டனர்” என்றார்.
ராஜஸ்தான் 2-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை வருகிற 2-ந் தேதியும், ஐதராபாத் அணி லக்னோவை 4-ந் தேதியும் எதிர் கொள்கின்றன.