இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 22வது பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் ஐந்தாவது நாள் நிகழ்வுகளை தொடர்ந்து செவ்வாய்க்கிழமை இலங்கை தடகள வீரர் மற்றும் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் காணாமல் போனதையடுத்து பர்மிங்காம் பெருநகர பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இலங்கை முகாமில் இருந்து பெண் ஜூடோ வீரரும் இலங்கை ஜூடோ அணியின் முகாமையாளரும் காணாமல் போயுள்ளதாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன என இலங்கையின் சிங்கள செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
பெண் ஜூடோ வீராங்கனை நேற்று தனது முதல் சுற்று போட்டியில் தோல்வியடைந்ததை அடுத்து, இரண்டு இலங்கையர்களும் காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் காணாமல் போனது குறித்து இலங்கை அணி நிர்வாகம் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்தது.
இதன் விளைவாக, இலங்கைக் குழுவின் பிரதம பொறுப்பதிகாரி மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) தம்பத் பெர்னாண்டோ, மேலும் சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக இலங்கைக் குழுவின் அனைத்து பாஸ்போர்ட்டுகளையும் பெற்றுள்ளார்.
மூன்று ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் அடங்கிய ஜூடோ அணியுடன் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளுக்காக இலங்கை 110 பேர் கொண்ட பலமான குழுவையும் 51 அதிகாரிகளையும் களமிறக்கியி்ருக்கிறது.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காக இலங்கை அணிக்கு 180 நாள் விசா வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.