அனைத்துலக இதோசுரியூ கராத்தேச் சுற்றுப்போட்டி 2022 இல் சாதித்த திருகோணமலையின் புதல்வர்கள்.
திருகோணமலையின் பெருமையினை உலகறியச் செய்த கராத்தே வீரர்கள், சென்செய் விபுலானந்தன் கெளரிதாசன், உதவிப் பயிற்றுவிப்பாளர் சென்செய் கெளரிதாசன் ஷ்வப்தேஷ் மற்றும் சென்செய் இ. உதயகாந் ஆகியோர்.
சுவிஸ் நாட்டினைப் பிரதி நிதித்துவப்படுத்தி 34 அனைத்துலகக் கராத்தே பதக்கங்களுடன் வெற்றிவெற்றியைத் தமதாக்கியது சென்செய் விபுலானந்தன் கெளரிதாசன் அணியினர்.
அனைத்துலக இதோசுரியூ கராத்தேச் சுற்றுப்போட்டிகள் 2022.
நான்கு வருடங்களுக்கு ஒரு தடவை நடாத்தப்படும் இந்த உலகலாவிய கராத்தேச் சுற்றுபோட்டிகள் இம்முறை டென்மார்க் நாட்டில் மிகப் பிரமாண்டமாக இடம்பெற்றது.
இப்போட்டிகளில் உலகின் 15 நாடுகளின் பல்வேறு தேசிய அணிகளுக்காக தொழில்முறை கராத்தே வீரர்களாக விளையாடும் அணிகள் பங்குபற்றியிருந்தன.
விசேடமாக தமிழ் இளையோர்கள் சுவிற்ஸர்லாந்து நாட்டினைப் பிரதி நிதித்துவப்படுத்தி 39 கராத்தே வீர, வீராங்கணைகள் உட்பட 51 பேர் கலந்து கொண்டிருந்தனர்.
சுவிஸ் நாட்டினைப் பிரதி நிதித்துவப்படுத்தி விளையாடி இருந்தாலும் குறித்த போட்டியில் கலந்துகொண்ட தமிழ் பேசும் ஒரேயொரு அணியாக சென்செய் விபுலானந்தன் கெளரிதாசன் அவர்களின் வழிநடத்தலில் இவ்வணி மட்டுமே இப்போட்டிகளில் கலந்து கொண்டிருந்தனர்.
இவர்களுக்கான தலைமைப் பயிற்றுவிப்பாளராக சென்செய் விபுலானத்ன கெளரிதாசன் அவர்களும், உதவிப் பயிற்றுவிப்பாளராக சென்செய் கெளரிதாசன் ஷ்வப்தேஷ் அவர்களும் பயிற்சிகளை வழங்கியிருந்தனர். இப்போட்டிகளுக்கான சுவிஸ் நாட்டுக்கான ஒருங்கிணைப்பாளராக சென்செய் கெள.ஷ்வப்தேஷ் அவர்களும், சுவிஸ் நாட்டின் அணித் தலைவராக செம்பாய் மு.ஆர்த்திகன் அவர்களும் செயற்பட்டனர்.
முதல் நாள் “காட்டா சுற்றுப்போட்டிகள் நடைபெற்றது இதில் முதல் போட்டியிலேயே இரண்டாம் இடத்தினைப் பெற்று வெள்ளிப்பதக்கத்துடன் சென்செய் இ. உதயகாந் அவர்கள் இவ் அணிக்குரிய பதக்க வேட்டையினை ஆரம்பித்து வைத்தார். சென்செய் இ. உதயகாந் அவர்கள் திருகோணமலையினைப் பிறப்பிடமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இரு நாட்களிலும் இடம்பெற்ற போட்டிகளில் மிக முக்கிய பிரிவுகளின்பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 06 இறுதி ஆட்டங்களுக்கான போட்டிகளில் 4 போட்டிகளுக்கான வீர, வீராங்கனைகளாக சுவிஸ் நாட்டின் தமிழ் இளையோர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள். அதிலும் இரு போட்டிகளுக்கான எதிர் போட்டியாளர்களாக சுவிஸ் அணி வீர,வீராங்கனைகளே தெரிவாகி இருந்தமை அவர்களது திறமைக்குப் பெருஞ்சான்றாக அமைந்திருந்தது.
இறுதி ஆட்டத்தில் பெரும் எதிர்பார்ப்புடன் அனைத்து நாட்டினராலும் எதிர்பார்க்கப்பட்ட காட்டா போட்டிகளில் தங்கத்தினை வென்று சென்செய் வி.ஷ்வப்தேஷ் அவர்கள் 2022- 2025 ஆண்டுக்கான காட்டா சாம்பியனாகத் தெரிவாகினார். இரண்டாம் இடத்தினை செம்பாய் பா.மெளனிசன் கைப்பற்றி வெள்ளிப்பதக்கத்தினை பெற்றுக் கொண்டார்.
அதே போன்று காட்டா அணிப்போட்டிகளில் 5-0 என்ற புள்ளிகளின் அடிப்படையில் ஸ்ரீ. நிசாலினி, தி. கஜானன், கெள.ஷ்வப்தேஷ் ஆகியோரது அணி தங்கத்தினைக் கைப்பற்றி முதலாம் இடத்தினையும், அயர்லாந்து அணி இரண்டாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டது.
3 தங்கங்கள் உட்பட மொத்தமாக 34 பதக்கங்களுடன் சுவிஸ் அணி நாடுகளின் வரிசையில் மூன்றாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டது. முதலிரண்டு இடங்களையும் முறையே டென்மார்க மற்றும் அயர்லாந்து நாடுகள் பெற்றுக் கொண்டன.
அதே போன்று ஜப்பானில் இருந்து வருகை தந்திருந்த இதோசுரியூ அனைத்துலகத் தலைமை ஆசிரியர் சோகே சதாகி சககாமி அவர்களது பயிற்சிப் பட்டறையிலும் தமிழ் இளையோர்கள் மிகச் சிறப்பாக பங்குபற்றியிருந்தனர்.
நான்கு வருடங்களுக்கு ஒருதடவை இடம்பெறும் இதோசுரியூ அனைத்துலகப் பிரதி நிதிகள் மற்றும் தலைமையாசிரியர்களுக்கான கூட்டத்திலும் சுவிஸ் அணியினர் பெரும் வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றுக் கொண்டதுடன் 2025ம் ஆண்டு ஜப்பானில் நடைபெற இருக்கும் அடுத்த அனைத்துலகப் போட்டிகளுக்கு சுவிஸ் அணியினரை மிகுந்த எதிர்பார்ப்புடன் வரவேற்பதாகவும் சோகே சதாகி சககாமி அவர்கள் தெரிவித்தார்.
மேலும் இறுதி நாள் பிரியாவிடை விருந்துபசாரத்திலும் எமது வீராங்கனைகள் தங்கள் கலாச்சார ஆடையான சேலை அணிந்து சென்று கலந்து கொண்டது மட்டுமன்றி, செல்வி யோ.சர்வாணி, செல்வி யோ.துசாதனா சகோதரிகள் வழங்கியிருந்த பரத நாட்டிய நிகழ்வு அனைவரையும் வெகுவாகக் கவர்ந்து அனைவரும் எழுந்து நின்று கைகளைத்தட்டி கெளரவப்படுத்தியிருந்தனர்.
சுவிஸ் அணியினராக இந்த அனைத்துலப் போட்டியில் கலந்து கொண்ட தமிழ் இளையோர்கள் இச்சுற்றுப்போட்டியில் கலந்து கொண்டிருந்த அனைத்து நாடுகளின் பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் பெற்று பெரும் கலந்துகொண்ட அணிகள் அனைவராலும் திரும்பிப்பார்க்கப்ட்டனர். புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் ஒரு தனி அணியாக உலகளாவிய போட்டியில் பங்குபற்றி தமது திறமையினவெளிப்படுத்தி உலகத் தமிழருக்குப் பெருமைசேர்த்துள்ளனர்.
தலைமை ஆசிரியராக வழிநடத்திய சென்செய் விபுலானந்தன் கெளரிதாசன் திருகோணமலையில் கராத்தே பயின்று திருகோணமலை மக்கேசியர் விளையாட்டரங்கில் பயிற்சி அளித்து பல கராத்தே வீரர்களை உருவாக்கியவர் என்பதுடன் இன்று அதே துறையில் பல சாதனைகளைச் செய்ததுடன் தனக்கான உலகத்தரத்தில் பெரும் அணியினையும் உருவாக்கிச் சாதித்துள்ளமை இந்த திருகோணமலைக்குக் கிடைத்த பெருமையாகும்.
உதவிப் பயிற்றுவிப்பாளர் சென்செய் கெளரிதாசன் ஷ்வப்தேஷ் அவர்கள் மற்றும் இ. உதயகாந் திருகோணமலை இந்துக்கல்லூரியின் பழைய மாணவர்கள் என்பதுடன் திருகோணமலை மக்கேசியர் அரங்கில் தனது ஆரம்ப கராத்தே பயிற்சியைப் பெற்றுக்கொண்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேற்பபடி வீரர்களினால் திருகோணமலையும் உலகத் தமிழர்களும் பெருமை கொள்கின்றனர்.
via – Ravanamurasu