ஜிம்பாப்வே உடன் அடித்திருந்தாலும் சுப்மன் கில் அடித்த இந்தச் சதம் சிறப்பானது. ஏனென்றால் ஆடுகளம் மெதுவாக இருந்தது!
மெதுவான ஆடுகளத்தில் மூன்றாவது பேட்ஸ்மேனாக களமிறங்கி 82 பந்துகளில் சதம் என்பது சாதாரணமானது இல்லை.
மெதுவான ஆடுகளங்களில் கிராஸ் பேட் போட்டு லெக் சைடில் அதிரடியாய் ஆட முடியாது. பேட்டை நேராகப் போட்டுத்தான் ஆட முடியும். பந்து அடிப்பதற்கு ஏதுவாக வேகமாக வராது. இதனால் கிரீஸில் இருந்து இறங்கிவந்துதான் ஆட முடியும். ஷிகர் தவான் ஆரம்பத்திலேயே இதைத்தான் செய்து கொண்டிருந்தார். ஆடுகளமும் பந்தும் புதியதாக இருக்கும் பொழுது மெதுவான ஆடுகளங்களில் ஒரு 10 ஓவர் ஆட வசதியாக இருக்கும். ஆனால் சுப்மன் கில் வந்தது 10 ஓவர்கள் தாண்டிதான்.
சிலர் மட்டும் ஒரு கலையைப் பெரிதும் மெனக்கெடாமல் கற்றுக்கொள்வார்கள். அவர்களுக்கு இயல்பாகவே அந்தக் கலை வாய்த்திருக்கும். உதாரணமாக சச்சின், ரோகித், பாபர் போன்ற பேட்ஸ்மேன்கள். இவர்களின் வரிசையில் சுப்மன் கில்லும் இருக்கிறார்.
இப்படியான பேட்ஸ்மேன்களிடம் எப்பொழுதும் மற்ற பேட்ஸ்மேன்களை விட பந்தை ஆடுவதற்குக் கொஞ்சம் நேரம் அதிகமாக இருக்கும். அதனால் இவர்கள் ஆடும் பொழுது பேட்டிங் என்பது ரொம்ப சாதாரணமாகத் தெரியும். இவர்களால் எந்த மாதிரி ஆடுகளத்திலும் அதற்கேற்றார்போல் உடனே தகவமைய முடியும். காரணம் இவர்களுக்கு எதிரில் வரும் பந்து மட்டும்தான் கணக்கு. அதற்கேற்றார்போல் லாபகரமாக செயல்படும் வித்தை இவர்களுடைய இயல்பாக இருக்கிறது. இன்று சுப்மன் கில் விளையாடிய விதம் இப்படித்தான் இருந்தது. அவரை ஆடுகளம் எந்த தொந்தரவும் செய்யவே இல்லை. மற்ற பேட்ஸ்மேன்கள் விளையாடியதை பார்த்திருந்தால் இந்தக் கூற்றின் உண்மை எளிதாய் விளங்கும்!
மேலும், 82 பந்தில் சதத்தை கொண்டுவந்தவர், 118 ரன்களில் இருந்த பொழுது கடைசி 50 ரன்னை 175 ஸ்டிரைக் ரேட்டில் அடித்திருந்தார். இது அவரால் ஒரு இன்னிங்சை சிறப்பாகக் கட்டமைக்க முடியும் என்றும், தேவைக்கு ஏற்றார்போல் அதிரடியாக ஆட முடியும் என்பதையும் காட்டுகிறது. அவரிடம் ஒரு aggression இருக்கிறது ஆனால் அதிலொரு கட்டுப்பாடு இருக்கிறது. அவரிடம் இயல்பாய் இருக்கும் பேட்டிங் திறமையோ இல்லை அவரது கிரிக்கெட் அறிவோ, அவரது aggressionயை அழகாகக் கட்டுப்படுத்துகிறது. இதுதான் அவரை ஆபத்தான பேட்ஸ்மேனாக மாற்றுகிறது!
ஒரு முழுமையான பேட்ஸ்மேனாக வருவதற்கான எல்லாக் கூறுகளும் அவரிடம் தென்படுகிறது!
✍️ Richards