கழக மட்டப் போட்டிகளில் கலக்கும் தீசன் விதுசன்..!

இப்போது இளைஞர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் ஒரு இளம் LeftArm Orthodox பந்துவீச்சாளர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விதுசன்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விதுசன் இப்போது இலங்கையில் இடம்பெற்று வருகின்ற கழகமட்ட கிரிக்கெட் தொடரில் எல்லோரது கவனத்தையும் தன்பால் ஈர்த்து இருக்கின்றார்.

தற்போது நடைபெற்று வரும் 3 நாட்கள் கொண்டதான மேஜர் லீக் தொடர் (Major leaque tournament ) மூன்று நாள் போட்டியை யாரேனும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தால், மூர்ஸ் விளையாட்டுக் கழகத்திற்காக விளையாடும் தீசன் விதுசன் என்ற பந்து வீச்சாளரை உற்று நோக்கியிருப்பீர்கள்.

 

பல துடுப்பாட்ட வீர்ர்களை மெய்சிலிர்க்கச் செய்த அவரது அசாதாரணமான இடது கை மரபுவழி சுழலின் மூலம் மூர்ஸ் SC க்கு விதுசன் ஒரு உத்வேகமாக இருந்துள்ளார்.

26 கழக அணிகளுக்கிடையிலான இந்த தொடரில் மூர்ஸ் SC அணியானது இதுவரை 3 போட்டிகளில் மூன்று வெற்றிகளுடன் A குழுவில் உள்ள மற்ற அனைத்து கிளப்புகளையும் முதலிடத்தில் இருப்பதற்கும் விதுசன் தான் காரணம் எனலாம்.

கடந்த 4ஆம் திகதி இடம்பெற்ற கண்டி கஸ்டம்ஸ் கிரிக்கெட் கிளப் அணிக்கு எதிரான போட்டியில் மூர்ஸ் விளையாட்டுக்கழகம் இன்னிங்ஸ் மற்றும் 108 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது.

இந்த போட்டியில் கண்டி கஷ்டம்ஸ் விளையாட்டுக்கழகம் முதல் இன்னிங்சில் 116 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்சில் 153 ஓட்டங்களை மட்டுமே பெற்று கொண்டது, இந்த கழகத்தினுடைய இந்தப் பெரிய சரிவுக்கு காரணமாக இருந்தவர் விதுசனாவார்.

முதல் இன்னிங்சில் 44 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை அள்ளினார், 2வது இன்னிங்சிலும் கூட தீசன் அற்புதமாக பந்துவீச்சு 14 ஓவர்கள் பந்துவீசி 35 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

மொத்தமாக இந்த போட்டியில் விதுசன் 10 விக்கெட்டுகளை கைப்பற்றினார், இம்முறைதான் முதல் தரப் போட்டிகளில் அறிமுகமாகியிருக்கும் தீசன் விதுசன் தன்னுடைய மூன்றாவது போட்டியிலேயே தன் வாழ்நாளின் மிகச் சிறந்த பந்துவீச்சு பெறுதியான 10 விக்கெட்டுகளை 79 ஓட்டங்கள் கொடுத்து கைப்பற்றி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸ் CC ற்கு எதிரான போட்டிகளில் மொத்தமாக 5 விக்கெட்டுகளையும் (2/19 மற்றும் 3/29) அதேபோன்று லங்கன் கிரிக்கெட் அணிக்கு எதிரான போட்டியில் (4/36 & 2/39) 6 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருக்கிறமை சிறப்பம்சமாகும்.

தீசன் விதுசன் மொத்தமாக 3 முதல் தரப் போட்டிகளில் இவர் 21 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார் என்பதும் சிறப்பம்சம் எனலாம்.

இம்முறை இடம்பெற்று வருகின்ற போட்டிகளில் நாணயக்கார மொத்தம் 24 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதலிடத்தில் இருக்க, ஹேமந்த 22 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்திலும், மாலிந்த புஷ்பகுமார 22 , சதுரங்க டீ சில்வா 22 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய நிலையில், விதுசன் 21 விக்கெட்டுக்களுடன் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார்.

மொத்தமாக இந்த 21 விக்கெட்டுகளை கைப்பற்றுவதற்காக தீசன் விதுசன் 73 ஓவர்களை வீசி 202 ஓட்டங்களை விட்டுக் கொடுத்திருக்கிறார், ஆக மொத்தத்தில் ஒரு விக்கெட்டை கைப்பற்றுவதற்காக தீசன் 9.61 ஓட்டங்களை வழங்குகிறார் (average) , இது மாத்திரமல்லாமல் ஒவ்வொரு 21 பந்துகளுக்கு ஒரு தடவை தீசன் விதுசன் விக்கெட் கைப்பற்றுகின்றவையும் சிறப்பம்சம், இந்த தொடரில் மிகச்சிறந்த (Striker rate) கொண்டிருக்கின்ற ஒரு வீரராக தீசன் விதுசன் காணப்படுகிறார்.

ஜப்னா கிங்ஸ் அணியின் பணிப்பாளராக இருக்கும் ஹரி வாசனின் தீவிர முயற்சியின் காரணமாக யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு, மூர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் இணைத்து வாய்ப்புக்கள் வழங்கப்பட்டு கொண்டிருக்கும் விதுசன் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

LPL போட்டிகளிலும் கூட இந்த தீசன் விதுசன் , ஹரி வாகீசனது முயற்சியின் பலனாக ஜப்னா கிங்ஸ் அணியின் வீரராக இணைத்துக்கொள்ளப்பட்ட இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலை கிரிக்கெட்டோடு தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் வடக்கு கிழக்கின் தமிழ்பேசும் வீரர்களுக்கு மத்தியில், பாடசாலைகளையும் கடந்து தேசிய கிரிக்கெட்டுக்குள் நுழையும் வேட்கையோடு களமாடும் நம்மவர் தீசனை வாழ்த்துவோம்.