2024 T20 மகளிர் உலகக் கிண்ணத் தொடருக்கான தகுதிச் சுற்றுப் போட்டியின் ஆரம்பச் சுற்றை இலங்கை மகளிர் அணி இன்று (3) தோல்வியின்றி நிறைவு செய்தது.
அதாவது போட்டியின் 19வது ஆட்டத்தில் அமெரிக்கா மகளிர் அணிக்கு எதிராக 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது.
அபுதாபியில் உள்ள டோலரன்ஸ் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 4 விக்கெட் இழப்புக்கு 123 ஓட்டங்களைப் பெற்று நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களை நிறைவு செய்தது.
பதில் இன்னிங்சை விளையாடிய அமெரிக்கா 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 105 மட்டுமே எடுக்க முடிந்தது. திஷா திங்ரா 28 , சிந்து ஸ்ரீஹர்ஷா 27 பெற்றனர்.
பந்துவீச்சில் சாமரி அத்தபத்து 14 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சார்பாக விஷ்மி குணரத்னே மற்றும் ஹன்சிமா கருணாரத்னே ஆகியோர் தலா 25 ஓட்டங்களைப் பெற்றனர். ஹர்ஷிதா சமரவிக்ரம 23 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், நிலக்ஷிகா சில்வா 21 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இதன்படி, இலங்கை அணி A பிரிவில் முன்னிலை பெற்று ஆரம்பச் சுற்றுடன் முடிவடைந்த நிலையில், எந்தப் போட்டியிலும் தோல்வியடையாத அயர்லாந்து அணி B பிரிவில் புள்ளிப்பட்டியலில் முன்னிலை பெற்றது.
போட்டியின் அரையிறுதிப் போட்டிகள் வரும் 5ம் தேதி நடைபெற உள்ளது. முதல் அரையிறுதியில் அயர்லாந்து அணி ஸ்காட்லாந்தையும், இலங்கை மகளிர் அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸையும் எதிர்த்து விளையாடவுள்ளது.
இலங்கை – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போட்டி இரவு 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.