இந்திய அணியால் தலைகுனிவு.. 10 வருடமாக தோல்வி.. பசியுடன் இருக்கிறோம்.. நாதன் லியோன் ஓபன் டாக்
இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரில் வென்று 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. கடைசியாக 2014-15 ஆம் ஆண்டு நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று இருந்தது. அதன் பின் நான்கு முறை நடந்த பார்டர் – கவாஸ்கர் தொடரில் இந்தியாவே வெற்றி பெற்று இருக்கிறது.
அதிலும் இரண்டு முறை ஆஸ்திரேலிய மண்ணில், ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இருந்தது இந்திய அணி. கடந்த 30 ஆண்டுகளில் வேறு அந்த அணியும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இத்தனை ஆதிக்கத்தை செலுத்தியதில்லை. உலகின் முன்னணி கிரிக்கெட் அணிகள் ஒன்றாக பார்க்கப்படும் ஆஸ்திரேலியாவுக்கு இது மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறது.
இன்னும் நான்கு மாதங்களில் பார்டர் – கவாஸ்கர் ட்ராபி டெஸ்ட் தொடர் துவங்க உள்ளது. அதற்காக ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி வீரர்கள் இப்போதே தங்களை தயார் செய்து கொள்ள துவங்கி இருக்கின்றனர். இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் சுழற் பந்துவீச்சாளர் நாதன் லியோன் அளித்த பேட்டியில் நீண்ட நாட்களாக இந்திய அணியை வெல்ல முடியாதது குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.
“நீண்ட காலமாக இது முடிக்கப்படாத ஒரு வேலையாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக எங்களால் இந்திய அணிக்கு எதிராக வெற்றி பெற முடியவில்லை. நாங்கள் இதை மாற்றுவதற்காக பசியுடன் காத்துக் கொண்டு இருக்கிறோம். குறிப்பாக ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணியை வீழ்த்துவதற்கு நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்.” என்றார்.
மேலும், “இந்தியா நிறைய நட்சத்திர வீரர்களை கொண்ட அணி. மிகவும் சவாலான அணி. ஆனால், அவர்களுக்கு எதிரான தொடரில் வெற்றி பெற்று கோப்பையை மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதில் நான் பசியுடன் இருக்கிறேன். நாங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வேறு ஒரு அணியாக இருந்தோம். ஆனால், இப்போது மிகச் சிறந்த ஆஸ்திரேலிய அணி என்ற இடத்தை நோக்கி நாங்கள் சென்று கொண்டு இருக்கிறோம். அந்த இடத்தை நாங்கள் இன்னும் அடையவில்லை. ஆனால், நாங்கள் நிச்சயம் நல்ல கிரிக்கெட்டை ஆடிக்கொண்டு இருக்கிறோம்.” என்றார் நாதன் லியோன்.