ஐபிஎல் வேறு.. நாட்டுக்காக விளையாடுவது வேறு.. ராஞ்சி டெஸ்டில் துருவ் ஜுரெலுக்கு பாடமெடுத்த ஜோ ரூட்!

ஐபிஎல் வேறு.. நாட்டுக்காக விளையாடுவது வேறு.. ராஞ்சி டெஸ்டில் துருவ் ஜுரெலுக்கு பாடமெடுத்த ஜோ ரூட்!

ராஜஸ்தான் அணியில் தன்னுடன் விளையாடிய ஜோ ரூட், இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய போது தன்னை ஸ்லெட்ஜிங் செய்த சம்பவம் குறித்து இந்திய வீரர் துருவ் ஜுரெல் கூறியுள்ளார். அப்போது ஜோ ரூட் தரப்பில், ஐபிஎல் வேறு.. நாட்டுக்காக விளையாடுவது வேறு என்றும் கூறியதாக தெரிய வந்துள்ளது.

வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் பேக் அப் விக்கெட் கீப்பராக துருவ் ஜுரெல் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான துருவ் ஜுரெல், சிறப்பாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியமான பங்களிப்பை வழங்கி இருந்தார். தற்போது ரிஷப் பண்ட் காயமடைந்தால், அவருக்கான பேக் அப் விக்கெட் கீப்பராக துருவ் ஜுரெல் உயர்ந்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 4 இன்னிங்ஸ்களில் விளையாடி 190 ரன்களை துருவ் ஜுரெல் விளாசினார். அதன்பின் ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக விளையாடிய துருவ் ஜுரெல், முதிர்ச்சியாக வீரராக பார்க்கப்பட்டார். இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய அனுபவம் குறித்து ஜுரெல் பகிர்ந்துள்ளார்.

அதில், ராஞ்சி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 353 ரன்கள் குவித்திருந்தது. இதன்பின் 2வது நாள் முடிவில் இந்திய அணி 219 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அப்போது நான் 30 ரன்களுடன் களத்தில் இருந்தேன். இதனால் இரவு முழுக்க எனக்கு தூக்கமே வரவில்லை. அடுத்த நாளிற்கான திட்டங்கள் குறித்து யோசித்து கொண்டே இருந்தேன்.

பழைய பந்தில் விரைவாக விளையாடி அரைசதத்தை எட்டுவதா அல்லது புதிய பந்திற்காக காத்திருப்பதே என்ற குழப்பம் வந்தது. ஆனால் 3வது நாள் ஆட்டத்தில் பழைய பந்திலேயே 36 ரன்களை எடுக்க முடிந்தது. பின்னர் புதிய பந்தை இங்கிலாந்து எடுத்த பின், ஆண்டர்சன் பவுலிங் செய்ய வந்தார். அவர் அட்டாக் செய்ததோடு, ஸ்லெட்ஜிங்கிலும் ஈடுபட்டார்.

அவர் பேசியது பிரிட்டிஷ் ஸ்டைல் ஆங்கிலம் என்பதால், பாதி வார்த்தைகள் புரியவே இல்லை. அப்போது ஆண்டர்சனுடன் பேர்ஸ்டோவ் மற்றும் ஜோ ரூட்டும் இணைந்து கொண்டனர். அது எனக்கு கூடுதல் அதிர்ச்சியை கொடுத்தது. ஏனென்றால் நானும் ஜோ ரூட்டும் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக இணைந்து விளையாடி இருக்கிறோம்.

இதனால் அவரிடம் நேரடியாகவே நீங்கள் ஏன் என்னை ஸ்லெட்ஜிங் செய்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு ஜோ ரூட், நாம் அனைவரும் அவரவர்களின் நாட்டுக்காக விளையாடுகிறோம் என்று பதில் அளித்ததாக தெரிவித்துள்ளார். அதன்பின் அந்தப் போட்டியில் சிறப்பாக ஆடிய துருவ் ஜுரெல் 90 ரன்கள் விளாசியதோடு, இந்திய அணியின் ஸ்கோரையும் 307 ரன்களாக உயர்த்தினார்.

பின்னர் இங்கிலாந்து அணி நிர்ணயித்த 192 ரன்கள் என்ற இலக்கை சுப்மன் கில் மற்றும் துருவ் ஜுரெல் இணைந்து விரட்டி அசத்தினார். இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற துருவ் ஜுரெல் முக்கிய காரணமாக அமைந்ததால், ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார். தோனியின் சொந்த மைதானமான ராஞ்சி மண்ணில் விக்கெட் கீப்பர் மூலமாக இந்திய அணி டெஸ்ட் போட்டியில் வென்றது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Previous articleவெல்லாலகே, சமரவிக்ரம ஆகஸ்ட் மாதத்திற்கான ஐசிசி வீரர்களாக முடிசூட்டப்பட்டனர்.
Next articleஇந்தியாவுக்கு எதிராக இதை செய்தால், கண்டிப்பாக வெற்றி பெறலாம்.. வங்கதேச கேப்டன் நஜ்முல் பேச்சு