ஏன் தினேஷ் கார்த்திக்குக்கு பவுலிங் போடுற? தோனி சொன்ன சூப்பர் பதில்.. ஆகாஷ் சோப்ரா பகிர்வு

ஏன் தினேஷ் கார்த்திக்குக்கு பவுலிங் போடுற? தோனி சொன்ன சூப்பர் பதில்.. ஆகாஷ் சோப்ரா பகிர்வு

தோனி இந்திய அணியில் இடம் பெறும் முன்பு தினேஷ் கார்த்திக்குக்கு வலைப் பயிற்சியில் பந்து வீசிய சம்பவம் நடந்துள்ளது. அது குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பகிர்ந்து கொண்டுள்ளார். அப்போது இந்திய அணியில் இடம் பிடிக்கும் முன்பு தோனியின் மனநிலை எப்படி இருந்தது என்பது பற்றி அவர் விவரித்துள்ளார். 2004 ஆம் ஆண்டு இந்தியா ஏ அணி கென்யா மற்றும் ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது.

அதற்கு முந்தைய ஆண்டு இந்திய அணியில் இடம் பிடித்திருந்த ஆகாஷ் சோப்ராவும் இந்தியா ஏ அணியில் ஆடினார். அந்தத் தொடருக்கு ஒரு மாதம் முன்பு பெங்களூரில் இந்திய அணி வலைப் பயிற்சியில் ஈடுபட்டது. அப்போது ஆகாஷ் சோப்ரா உடன் அறையை பகிர்ந்து கொண்டார் தோனி. அதன்பின் என்ன நடந்தது என்பது குறித்து ஆகாஷ் சோப்ரா கூறியதாவது –

“தோனியும் நானும் விசித்திரமான முறையில் சந்தித்துக் கொண்டோம். 2004 ஆம் ஆண்டு இந்தியா ஏ அணி ஜிம்பாப்வே மற்றும் கென்யாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. நான் அதற்கு முன்பே இந்திய அணியில் ஆடி விட்டேன். அப்போது நான் பயிற்சி முகாமில் பங்கேற்க பெங்களூர் சென்றேன். அங்கே ஹோட்டலில் தோனி தான் என்னுடன் அறையை பகிர்ந்து கொள்ளப் போகிறார் என்பதை அறிந்தேன். அவர் எங்கே இருந்து வருகிறார்? என நான் கேட்டேன்.”

“அவரைப் பற்றி அதற்கு முன் நான் ஒரு முறை மட்டுமே கேள்விப்பட்டு இருந்தேன். தியோதர் டிராபியில் அவர் அதிக ரன்கள் குவித்தார். அது மட்டும் தான் எனக்கு தெரியும். நான் அவருடன் அதற்கு முன் பேசியதில்லை. பெங்களூரில் நாங்கள் ஒரே அறையை ஒரு மாதத்திற்கு பகிர்ந்து கொண்டோம். அப்போது தோனி வேறு மாதிரி இருந்தார். அவரது ஃபோன் அடிக்கடி அடித்துக் கொண்டே இருக்கும். ஆனால், அவர் பதில் சொல்ல மாட்டார்.”

“நான் அவரிடம் நீங்கள் எப்போது தூங்கச் செல்வீர்கள்? என்று கேட்டேன். “உங்களுக்கு எப்போது வேண்டுமோ, நீங்கள் அப்போது அறையின் விளக்கை அணைத்து விடுங்கள்” என்று அவர் என்னிடம் கூறினார். அவர் அசைவம் சாப்பிடுபவர், நான் சைவம் சாப்பிடுபவன் அதனால் எங்கள் கூட்டணி அறையில் அத்தனை சிறப்பாக இல்லை. நான் அவரிடம் என்ன சாப்பிடப் போகிறீர்கள்? என்று கேட்டேன். அவர், “உங்களுக்கு என்ன வேண்டுமோ அதையே ஆர்டர் செய்யுங்கள்” என்றார்.”

“அவர் எப்போதுமே ஹோட்டல் ஊழியர்களை அழைத்ததில்லை. மிகவும் கூச்ச சுபாவத்துடன் இருப்பார். அந்த ஒரு மாதம் முழுவதும் அவர் எனக்காக சைவ உணவையே உண்டார். அப்போது இருந்த தோனி முற்றிலும் வித்தியாசமானவர். அவர் எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார். ஆனால், கவனத்துடன் இருப்பார். அவர் அப்படி இருக்க காரணம் அதிக தன்னம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் அவர் இருந்தது தான்.”

“எப்போது தனக்கு வாய்ப்பு கிடைத்ததோ அப்போது மிக சிறப்பாக ஆடினார். அவருக்கு ஜிம்பாப்வேவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், கென்யாவில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது அவர் பேய் பிடித்தது போல பேட்டிங் செய்தார். அதற்கு முன் எந்த ஒரு பேட்ஸ்மேனும் ஒரு ஃபாஸ்ட் பவுலருக்கு எதிராக ரிவர்ஸ் ஸ்வீப் செய்து நான் பார்த்ததில்லை. பாகிஸ்தான் பந்து வீச்சாளர் இஃப்திகார் அஞ்சும் அப்போது 140 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் வீசினார். அவர் ஏற்கனவே பாகிஸ்தான் அணிக்கு ஆடி இருக்கிறார்.”

“அவருக்கு எதிராக தோனி ஃபைன் லெக்கில் ஒரு ஃபோர் அடித்தார். அதன் பின் அந்த பவுலர் ஃபீல்டிங்கை மாற்றினார். அப்போது தோனி அடுத்த பந்திலேயே சிக்ஸ் அடித்தார். நான் அப்போது, “யார் இந்த ஆள்?” என வியந்து போய் பார்த்தேன். அவர் வலைப்பயிற்சியில் பேட்டிங் பயிற்சி செய்ய மாட்டார். அதற்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கு பவுலிங் செய்து கொண்டு இருப்பார். அப்போது தினேஷ் கார்த்திக் தோனியின் போட்டியாளராக இருந்தார்.”

“அதனால், தோனிக்கு அப்போது வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது. ஆனால், தினேஷ் கார்த்திக்குக்கு அவர் எப்போதும் பவுலிங் செய்து கொண்டிருந்தார். நான் அவரிடம், “ஏன் நீ தினேஷ் கார்த்திக்குக்கு பவுலிங் செய்கிறாய்? ஏன் பேட்டிங் செய்வதில்லை? தினேஷ் கார்த்திக் தொடர்ந்து பேட்டிங் செய்து அதிக ரன்களை எடுத்துக் கொண்டு இருந்தால், நீ எப்போதும் பேட்டிங் செய்வாய்?” என அவரிடம் கேட்டேன்.

அதற்கு தோனி, “நான் பந்து வீசுவதை விரும்புகிறேன். எனக்கு அது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.” என்றார். அவர் மிகவும் திறமைசாலியாக இருந்தார். அவர் விக்கெட் கீப்பிங்கிற்கு கூட அதிக பயிற்சி செய்ய மாட்டார். ஆனால், இன்று உலகிலேயே விக்கெட் கீப்பிங்கில் மிக வேகமாக செயல்பட்டு வருகிறார்.” என்றார் ஆகாஷ் சோப்ரா.

Previous articleஇந்தியாவுக்கு எதிராக இதை செய்தால், கண்டிப்பாக வெற்றி பெறலாம்.. வங்கதேச கேப்டன் நஜ்முல் பேச்சு
Next articleபுதிய கால்பந்து தரவரிசை..!