கோலி, ரோஹித் மட்டும் தான் சிறந்த வீரர்களா.. இவரும் முக்கிய வீரர்தான்.. முன்னாள் கேப்டன் ஓபன் டாக்
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அளிக்கப்படுவதில்லை என முன்னாள் வங்கதேச கேப்டன் தமிம் இக்பால் சுட்டிக்காட்டி இருக்கிறார். சமீபத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் அஸ்வின் சிறப்பாக செயல்பட்டு ஆட்டநாயகன் விருதை வென்றார்.
அதே முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவருமே பேட்டிங்கில் பெரிதாக சோபிக்கவில்லை. ரோஹித் சர்மா இரண்டு இன்னிங்ஸ்களில் 11 ரன்கள் மட்டுமே எடுத்தார். விராட் கோலி இன்னிங்ஸ்களில் 23 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார். முதல் இன்னிங்ஸில் அஸ்வின் சதம் அடிக்காமல் போயிருந்தால் இந்தியா இந்தப் போட்டியில் சிக்கலில் சிக்கி இருக்கும்.
அஸ்வின் சதம் அடித்ததோடு, இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்களையும் வீழ்த்தினார். இந்த செயல்பட்டால் அஸ்வினை அனைவரும் புகழ்ந்து வருகின்றனர். ஆனால், மற்ற சமயங்களில் அவரை யாரும் கண்டு கொள்வதில்லை, எப்போதும் ரோஹித், விராட் கோலி பற்றியே பேசுகிறார்கள். அவர்கள் அளவுக்கு சாதனைகள் செய்து இருக்கும் அஸ்வினை பற்றி பேசுவதில்லை என தமிம் இக்பால் கூறி இருக்கிறார்.
இது குறித்து தமிம் இக்பால் பேசுகையில், “அஸ்வின் செய்தது மிகவும் சிறப்பான ஒரு விஷயம். ஒரு தேர்ந்த பேட்ஸ்மேன் போல அவர் பேட்டிங் செய்தார். நான் வேறு நாட்டில் இருந்து வந்திருக்கிறேன். நான் எப்போதும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா பற்றியே கேள்விப்படுகிறேன். ஆனால், எனது கண்களுக்கு ரவிச்சந்திரன் அஸ்வினும் ஒரு முக்கியமான வீரராகத் தான் தெரிகிறார்.” என்றார்.
மேலும், “அவர் நன்றாக ஆடினால் மட்டுமே நாம் அவரைப் பற்றி பேசுகிறோம். அவர் எப்போது சதம் அடிக்கிறாரோ, எப்போது 5 அல்லது 6 விக்கெட் எடுக்கிறாரோ அப்போது மட்டும் நாம் அவரைப் பற்றி பேசுகிறோம். ஆனால், இந்திய அணிக்கு அவரது பங்களிப்பு என்பது மிகவும் அதிகம். அது ரோஹித் சர்மா அளவுக்கு. விராட் கோலி அளவுக்கு மிகவும் பெரியது.” என சுட்டிக்காட்டி இருக்கிறார் தமிம் இக்பால்.