உலகின் நம்பர் 1 ஸ்பின்னர்.. அஸ்வின் இதை மட்டும் செய்தால் ஆஸ்திரேலிய பவுலர் லியோன் காலி
உலகின் முன்னணி சுழற் பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வீழ்த்தும் பட்சத்தில் முக்கிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சாதனை ஒன்றை படைப்பார். சமீபத்தில் நடந்து முடிந்த வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே அஸ்வின் சிறப்பாக செயல்பட்டு இருந்தார்.
சென்னை சேப்பாக்கத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த அஸ்வின், இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்களை வீழ்த்தினார். அதன் மூலம் அவர் பல்வேறு சாதனைகளை செய்து இருந்தார். தற்போது அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மேலும் 8 விக்கெட்களை வீழ்த்தினால் ஆஸ்திரேலியாவின் நாதன் லியோனை முந்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் முதல் இடத்தை பிடிப்பார்.
தற்போது ஆஸ்திரேலியாவின் நாதன் லியோனுக்கும், இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கும் இடையே உலகின் சிறந்த சுழற் பந்துவீச்சாளர் யார்? என்று போட்டி உள்ளது. நாதன் லியோன் அதிக டெஸ்ட் போட்டிகளில் ஆடி வருவதால் அவர் அஸ்வினை விட அதிக விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். ஆனால், அவரை விட குறைந்த டெஸ்ட் போட்டிகளிலேயே ஆடி இருந்தாலும் சிறந்த பவுலிங் ஆவரேஜ் மற்றும் பவுலிங் ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார் அஸ்வின்.
அந்த வகையில் அவர் தற்போது ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட்டில் 191 இன்னிங்ஸில் 522 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். நாதன் லியோன் 242 இன்னிங்ஸ்களில் விளையாடி 530 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். இருவருக்கும் இடையிலான விக்கெட் எண்ணிக்கையில் வித்தியாசம் மிகவும் குறைவு தான். ஆனால், இருவரும் விளையாடிய இன்னிங்ஸ் எண்ணிக்கையில் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது.
அதேபோல, ஒட்டுமொத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களில் ரவிச்சந்திரன் அஸ்வின் 69 இன்னிங்ஸ்களில் 180 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். ஆஸ்திரேலியாவின் நாதன் லியோன் 78 இன்னிங்ஸ்களில் 187 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்.
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. நிச்சயம் இந்த நான்கு போட்டிகளுக்குள் அஸ்வின் நாதன் லியோனை முந்தி உலக அளவிலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் அதிக விக்கெட்களை வீழ்த்தி இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் டிசம்பர் மாதம் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அந்த தொடரின் போது உலகின் சிறந்த சுழற் பந்துவீச்சாளர் யார்? என்ற கேள்விக்கு பதில் கிடைக்கும். அந்த தொடரில் அஸ்வின் மற்றும் லியோன் விளையடுவார்கள் என்பதால் இருவருக்கும் இடையே நேரடி போட்டி இருக்கும்.