சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் காலில் விழுந்த பிசிசிஐ.. 2 அணிகளுக்காக மொத்தமாக மாற்றப்பட்ட விதி
ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு மெகா ஏலத்திற்கான விதிகள் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாதகமாக மாற்றப்பட்டு இருக்கிறது என்று ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த இரண்டு அணிகளில் நலனுக்காக மட்டும்தான் பிசிசிஐ செயல்படுகிறது என்றும், இவர்களது சேவகர்கள் போல் பிசிசிஐ மாறிவிட்டதாகவும் ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ரசிகர்களின் இந்த குற்றச்சாட்டுக்கு என்ன காரணம் என்று தற்போது பார்க்கலாம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் தான் ஐபிஎல் தொடர் வரலாற்றிலேயே அதிக முறை கோப்பையை வென்றிருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் இந்த இரண்டு அணிகள் மோதும் போதுதான் ஏறத்தாழ ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் பார்க்கிறார்கள்.
இதனால் இந்த இரு அணிகளையும் தங்களது செல்லப் பிள்ளைகளாக பிசிசிஐ பாவித்து வருகிறது. இந்த சூழலில் ஐபிஎல் வீரர்கள் தக்க வைக்கும் முறையில் பல அணிகளும் பல கோரிக்கை விடுத்த நிலையில், அதனை எல்லாம் நிராகரித்து சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாதகமாக மட்டும் விதிகள் மாற்றப்பட்டு இருக்கிறது.
உதாரணத்திற்கு சிஎஸ்கே அணி கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கைவிடப்பட்ட uncapped வீரர் என்ற ஒரு விதியை கொண்டு வாருங்கள் என பிசிசிஐ இடம் கோரிக்கை விடுத்தது. அதன்படி கடந்த ஐந்து ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாத இந்திய வீரரை uncapped வீரர் என்று கருத வேண்டும் என்று பிசிசிஐ இடம் சிஎஸ்கே வலியுறுத்தியது.
அதன்படி தற்போது ஐபிஎல் நிர்வாகம் விதியை மாற்றி இருக்கிறது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி uncapped வீரராக விளையாடக் கூடும். இதேபோன்று மும்பை இந்தியன்ஸ் அணி தங்களிடம் பல ஸ்டார் வீரர்கள் இருப்பதால் அவர்களை ஏலத்திற்கு முன்பே தக்க வைத்துக் கொள்ள அதிக ஊதியம் வழங்கும் வகையில் விதியை மாற்ற வேண்டும் என கூறி இருந்தது.
உதாரணத்திற்கு பும்ரா, சூரியகுமார் யாதவ்,ரோகித் சர்மா ஹர்திக் பாண்டியா என நான்கு ஸ்டார் வீரர்கள் இருக்கிறார்கள். பழைய விதிப்படி இந்த நான்கு வீரர்களையும் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்றால் யாராவது இருவருக்கு சம்பளம் குறைய வாய்ப்பு இருக்கிறது. தற்போது புதிய விதிப்படி இரண்டு வீரர்களுக்கு 18 கோடி,இரண்டு வீரர்களுக்கு நான்கு கோடி ஒரு வீரருக்கு 11 கோடி என விதி மாற்றப்பட்டிருக்கிறது.
அதன் மூலம் தற்போது ரோகித் சர்மா, பும்ரா ஆகியோரை 18 கோடி ரூபாய்க்கும், சூரியகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியாவை 14 கோடி ரூபாய்க்கும் மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது ஏலத்துக்கு முன்பே தக்க வைத்துக் கொள்ளலாம். மேலும் இரண்டு அணிகளுமே ஆறு வீரர்களை குறைந்தபட்சம் தக்க வைத்துக்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என பிசிசிஐயிடம் கோரிக்கை விடுத்தது. அதனையும் தற்போது பிசிசிஐ ஓகே செய்து விட்டது. இது மற்ற அணி ரசிகர்களை கடுப்படைய செய்திருக்கிறது.