சுப்மன் கில் காயம்.. நம்பர் 3ல் களமிறங்க போகும் தேவ்தத் படிக்கல்.. கம்பீர், பும்ரா போட்ட திட்டம்!
இந்திய அணியின் நட்சத்திர வீரரான சுப்மன் கில் பயிற்சியின் போது விரலில் காயமடைந்த நிலையில், அவரால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாது என்று தெரிய வந்துள்ளது. இதனால் அவரது இடத்தில் இளம் வீரரான தேவ்தத் படிக்கலை களமிறக்க கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் பும்ரா இருவரும் திட்டமிட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் இந்தியா ஏ அணி வீரர்களுடன் இணைந்து இந்திய அணி வீரர்கள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடினர். அப்போது ஸ்லிப் திசையில் ஃபீல்டிங் செய்த சுப்மன் கில் கேட்ச் ஒன்றை பிடிக்க முயற்சித்த போது, விரலில் காயமடைந்து களத்தில் இருந்து வெளியேறினார்.
பின்னர் செய்த ஸ்கேன் பரிசோதனையில் சுப்மன் கில்லின் விரல் அதீதமாக காயமடைந்தது தெரிந்தது. இதனைத் தொடர்ந்து அடுத்த நாள் பயிற்சி ஆட்டத்தில் சுப்மன் கில் களமிறங்கவில்லை. இதனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் விளையாடுவதே கேள்விக்குறியானது. இதன் காரணமாக இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மாற்று திட்டங்களையும் ஆலோசிக்க தொடங்கினார்.
ஏனென்றால் கேப்டன் ரோஹித் சர்மாவும் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். இதனால் தொடக்க வீரராக கேஎல் ராகுலை களமிறக்க திட்டமிட்டு வந்த நிலையில், சுப்மன் கில் இடத்தில் எந்த வீரருக்கு வாய்ப்பு அளிப்பது என்ற குழப்பம் ஏற்பட்டது. இதனிடையே ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்ற இந்தியா ஏ அணி வீரர்கள் நாடு திரும்புவதற்காக விமானம் ஏறியுள்ளனர்.
அந்த அணியில் இருந்து தேவ்தத் படிக்கல் மட்டும் இந்திய அணியுடன் பயணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார். இதனால் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சுப்மன் கில் இடத்தில் தேவ்தத் படிக்கல் களமிறங்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்திய அணியில் அபிமன்யூ ஈஸ்வரன், சர்ஃபராஸ் கான் உள்ளிட்ட பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர்.
ஆனால் நம்பர் 3ல் இருவருக்கும் விளையாடிய எந்த அனுபவமும் கிடையாது. ஆஸ்திரேலியா மண்ணில் விராட் கோலி போன்ற நட்சத்திர வீரரின் பேட்டிங் வரிசையை மாற்றுவது மிகப்பெரிய பின்னடைவை இந்திய அணிக்கு அளிக்கும். இதனால் ஆஸ்திரேலியா ஏ அணியுடன் நம்பர் 4ல் களமிறங்கி சிறப்பாக விளையாடிய தேவ்தத் படிக்கல் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.
இந்த முடிவை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் ஜஸ்பிரிட் பும்ரா இருவரும் இணைந்து எடுத்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் தொடரில் தேவ்தத் படிக்கல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அதேபோல் ஆஸ்திரேலியா மண்ணில் இருக்கும் பவுன்ஸை சரியாக கணித்து விளையாடுவதால் படிக்கலுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது தெரிய வந்தது.