நடராஜனை ரூ.10 கோடிக்கு வாங்கிய சிஎஸ்கே.. நவீனுக்கு ரூ.5.5 கோடி.. அஸ்வினின் ஏலத்தில் நடந்தது என்ன?

நடராஜனை ரூ.10 கோடிக்கு வாங்கிய சிஎஸ்கே.. நவீனுக்கு ரூ.5.5 கோடி.. அஸ்வினின் ஏலத்தில் நடந்தது என்ன?

ஐபிஎல் தொடருக்கான மாதிரி மெகா ஏலத்தை ரவிச்சந்திரன் அஸ்வின் நடத்தி வருகிறார். அதில் தமிழக வீரர் நடராஜனை சிஎஸ்கே அணி ரூ.10 கோடிக்கும், சுழற்பந்துவீச்சாளரான ராகுல் சஹருக்கு ரூ.6.5 கோடியும் கொடுத்து வாங்கி இருக்கிறது.

ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் இன்னும் ஒரு வாரத்தில் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடக்கவுள்ளது. இதற்காக 10 அணிகளின் நிர்வாகிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இன்னொரு பக்கம் எந்த அணி எந்த வீரரை வாங்கும் என்பதை கணிக்க மாதிரி ஏலமும் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அஸ்வின் தனது யூட்யூப் சேனலில் மாதிரி ஏலத்தை நடத்தி வருகிறார்.

அந்த வகையில் வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் ஸ்பின்னர்களுக்கான ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் ஆஸ்திரேலியா அணியின் ஸ்பின்னரான ஆடம் ஸாம்பாவை ரூ.5.5 கோடிக்கு ராஜஸ்தான் அணியால் வாங்கப்பட்டார். தொடர்ந்து சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரான தீக்சனாவை ரூ.4 கோடிக்கு ஐதராபாத் அணியும், தமிழக வீரர் சாய் கிஷோரை ரூ.10 கோடிக்கு ஆர்சிபி அணியும் வாங்கியது.

தொடர்ந்து ஆஃப்கான் வீரர் நூர் அஹ்மத்தை ரூ.6.5 கோடிக்கு பஞ்சாப் அணியாலும், பஞ்சாப் முன்னாள் வீரர் ராகுல் சஹரை ரூ.6.5 கோடிக்கு சிஎஸ்கே அணியும் வாங்கியது. ஏற்கனவே அஸ்வின், ஜடேஜாவை வாங்கிய நிலையில் 3வது ஸ்பின்னராக ராகுல் சஹரை வாங்கியுள்ளனர். பின்னர் வேகப்பந்துவீச்சாளர்களுக்கான ஏலம் நடத்தப்பட்டது.

அதில் தமிழக வீரர் நடராஜனை ரூ.10 கோடி கொடுத்து சிஎஸ்கே அணியும், நவீன் உல் ஹக் ரூ.5.5 கோடிக்கு டெல்லி அணியும், இந்திய வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா ரூ.3.75 கோடிக்கு ராஜஸ்தான் அணியாலும், சிஎஸ்கே முன்னாள் வீரர் துஷார் தேஷ்பாண்டே ரூ.5 கோடிக்கு ஐதராபாத் அணியாலும் வாங்கப்பட்டார். அதேபோல் முகேஷ் குமாரை ரூ.5.5 கோடிக்கு ஆர்சிபி அணியும், அல்ஹாரி ஜோசப்பை ரூ.2 கோடிக்கு குஜராத் அணி வாங்கியது.

பின்னர் இந்திய அணியின் கலீல் அஹ்மத் ரூ.7.5 கோடிக்கு டெல்லி அணியும், ஷிவம் மாவி ரூ.2 கோடிக்கு ஐதராபாத் அணியாலும், ஃபெர்குசனை ரூ.3.25 கோடிக்கு ஃபெர்குசனை ராஜஸ்தான் அணியும், உமேஷ் யாதவ் ரூ.2 கோடிக்கு கேகேஆர் அணியும் வாங்கியது. அதேபோல் கோட்ஸி ரூ.2 கோடிக்கு லக்னோ அணியும், உம்ரான் மாலிக்கை ரூ.3.25 கோடிக்கு டெல்லி அணியும், ஹேசல்வுட் ரூ.3.25 கோடிக்கு குஜராத அணி வாங்கியது.

தென்னாப்பிரிக்கா வீரர் நார்கியே-வை வாங்க எந்த அணியும் முன்வரவில்லை. இறுதியாக இந்திய அணியின் ஆவேஷ் கான் ரூ.6 கோடிக்கு கேகேஆர் அணி வாங்கியுள்ளது. இந்திய அன்-கேப்ட் வீரர்கள் இதுவரை ஏலத்திற்கு வராத நிலையில், 10 அணிகளும் கிட்டத்தட்ட 12 வீரர்களுக்கு மேல் வாங்கி இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் பர்ஸ் தொகையும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.