இளம் ஆல்-ரவுண்டருக்கு அடிச்ச லக்.. முதல் போட்டியில் ஆட வைக்க திட்டம்.. கம்பீர் அதிரடி
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நிதிஷ் குமார் ரெட்டியை இந்திய அணியில் அறிமுகம் செய்ய முடிவு செய்து இருக்கிறார் பயிற்சியாளர் கவுதம் கம்பீர். ஆஸ்திரேலிய மண்ணில் வேகப் பந்துவீச்சாளர்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்ற நிலையில் இந்திய அணி நான்காவது வேகப் பந்துவீச்சாளராக நிதிஷ் குமார் ரெட்டியை ஆட வைக்க முடிவு செய்து இருக்கிறது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளன. இந்த தொடரின் முதல் போட்டி பெர்த் மைதானத்தில் நவம்பர் 22 அன்று துவங்க உள்ளது. இந்த போட்டிக்கான அணியில் நிதிஷ் குமார் ரெட்டி நிச்சயமாக இடம் பெறுவார் என கூறப்படுகிறது.
அவர் வேகப் பந்துவீச்சு வீசும் ஆல் ரவுண்டர் என்பதால் அவரை இந்திய அணி நிர்வாகம் தேர்வு செய்துள்ளது. இதற்கு முன் 23 முதல் தர போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கிறார் நிதிஷ் குமார் ரெட்டி. அதில் அவர் 56 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். ஒரு பகுதி நேர பந்து வீச்சாளராக இது நல்ல செயல்பாடு என்றாலும் பேட்டிங்கில் அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
23 முதல் தரப் போட்டிகளில் அவர் 779 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். இதன் சராசரி 21 மட்டுமே. இந்த நிலையில் அவரை நான்காவது பந்து வீச்சாளராகவும், ஆல் ரவுண்டராகவும் ஆட வைக்க கம்பீர் முடிவு எடுத்து இருப்பது சரியா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
நான்கு வேகப் பந்துவீச்சாளர்களை இந்திய அணி பயன்படுத்துகிறது என்றால் நிச்சயம் இந்திய அணியில் ஒரு ஸ்பின்னர் மட்டுமே இடம் பெறுவார் என எதிர்பார்க்கலாம். அஸ்வின் அல்லது ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவரில் ஒருவர் மட்டும் பிளேயிங் லெவனில் இடம்பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது.
இதற்கு முன் ஹர்திக் பாண்டியா இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்று இருந்தபோது அவர் நான்காவது வேகப் பந்துவீச்சாளராக செயல்பட்டு வந்தார். அவரது இடத்தை தான் நிதிஷ் குமார் ரெட்டியை வைத்து நிரப்ப அணி நிர்வாகம் முயற்சி செய்ய உள்ளது. இது வெற்றி பெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. நேரடியாக ஆஸ்திரேலிய மண்ணில் நிதிஷ் குமார் ரெட்டி அறிமுகப்படுத்தப்பட்டால் அவரால் அந்த சூழ்நிலையை சரியாக உணர்ந்து விளையாட முடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.