ஸ்டீவ் ஸ்மித் ஹெல்மேட்டில் கேமரா இருக்கு.. பவுலிங் செய்ய மறுத்த அஸ்வின்.. கைஃப் சொன்ன சீக்ரெட்!

ஸ்டீவ் ஸ்மித் ஹெல்மேட்டில் கேமரா இருக்கு.. பவுலிங் செய்ய மறுத்த அஸ்வின்.. கைஃப் சொன்ன சீக்ரெட்!

ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடிய போது ரவிச்சந்திரன் அஸ்வின் பயிற்சியின் போது ஸ்டீவ் ஸ்மித்திற்கு பவுலிங் செய்ய மறுத்த சம்பவம் தெரிய வந்துள்ளது. ஸ்டீவ் ஸ்மித் ஹெல்மேட்டில் கேமரா இருப்பதால், அவர் தனக்கு எதிராக அனலைஸ் செய்வார் என்பதை அஸ்வின் கூறியதாக முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டுக்கு குட் பை கூறியுள்ளார். இனி ஐபிஎல் தொடரில் மட்டுமே அஸ்வினை பார்க்க முடியும் என்று ரசிகர்கள் சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதேபோல் முன்னாள் வீரர்கள் பலரும் அஸ்வினின் 2வது இன்னிங்ஸ்-க்கு வாழ்த்து கூறி, அவருடனான நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் டெல்லி அணிக்காக ரவிச்சந்திரன் அஸ்வின் 2 ஆண்டுகள் விளையாடிய போது, அந்த அணியின் பயிற்சியாளராக முகமது கைஃப் செயல்பட்டார். அப்போது ரவிச்சந்திரன் அஸ்வின், ஆஸ்திரேலியா அணியின் ஸ்டீவ் ஸ்மித்திற்கு பயிற்சியின் போது கூட பவுலிங் செய்ய மறுத்திருப்பது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து முகமது கைஃப் பேசுகையில், ரவிச்சந்திரன் அஸ்வினுடன் 2 சீசன்களில் பணியாற்றி இருக்கிறேன். 2020ஆம் ஆண்டு டெல்லி அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற, அஸ்வின் முக்கியமான பங்கு வகித்தார். ஏனென்றால் புதிய பந்தில் பவுலிங் செய்த அஸ்வின், ரோஹித் சர்மா, விராட் கோலி, பொல்லார்ட் போன்ற பெரிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அந்த சீசனில் சிறப்பாக விளையாடியதால், அஸ்வின் அடுத்த ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் தேர்வு செய்யப்பட்டார். அந்த நேரத்தில் ஐபிஎல் தொடர் மட்டுமல்லாமல் டி20 உலகக்கோப்பை தொடரும் துபாயில் நடைபெற்றது. அந்த சீசனில் டெல்லி அணிக்காக விளையாட ஸ்டீவ் ஸ்மித் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

ஒருமுறை ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்ட போது, அஸ்வினை அவருக்கு பவுலிங் செய்ய அறிவுறுத்தினேன். அப்போது ரவிச்சந்திரன் அஸ்வின் உடனடியாக மறுப்பு தெரிவித்தார். அந்த நிமிடம் அஸ்வின் என்னை மிகவும் கவர்ந்துவிட்டார் என்று சொல்வேன். ஏனென்றால் அஸ்வின் நுட்பமான வீரர் மட்டுமல்ல, மிகவும் நுட்பமான வீரர் என்று எனக்கு புரிய வைத்தார்.

அப்போது ஸ்டீவ் ஸ்மித் அணிந்திருந்த ஹெல்மேட்டில் கேமரா பொருத்தப்பட்டிருந்தது.அவரிடம் கேமரா இருப்பதால், எனது பவுலிங்கை ரெக்கார்ட் செய்து, உலகக்கோப்பையின் போது அனலைஸ் செய்வார். அதனை ஒருபோதும் நான் அனுமதிக்க மாட்டேன் என்று தெரிவித்தார். ஸ்டீவ் ஸ்மித் ஹெல்மேட்டில் கேமரா இருந்ததை கொஞ்சம் கூட நான் கவனிக்கவில்லை.

ஆனால் அஸ்வின் உடனடியாக கவனித்து, எச்சரிக்கையுடன் இருந்தார். அதேபோல் டெல்லி அணிக்காக விளையாடும் சக வீரராக் ஸ்டீவ் ஸ்மித்திற்கு அனைத்து வகையிலும் உதவ தயாராக இருக்கிறேன். ஆனால் உலகக்கோப்பை தொடரில் விளையாட தயாராகும் ஸ்டீவ் ஸ்மித்திற்கு எந்த உதவியும் செய்ய மாட்டேன் என்று என்னிடம் கூறினார். அந்த நொடி அஸ்வின் என்னை ஆச்சரியப்படுத்திவிட்டதாக கூறியுள்ளார்.