வருணுக்கு லெக் ஸ்பின் போட வராது அது கூட தெரியாம.. இங்கிலாந்து வீரரை வறுத்து எடுத்த அஸ்வின்

வருணுக்கு லெக் ஸ்பின் போட வராது அது கூட தெரியாம.. இங்கிலாந்து வீரரை வறுத்து எடுத்த அஸ்வின்

இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் வருண் சக்கரவர்த்தியின் பந்துவீச்சில் முதல் இரண்டு போட்டிகளிலும் ஆட்டம் இழந்தார். அவரால் வருண் சக்கரவர்த்தியின் பந்துவீச்சை சரியாக புரிந்து கொண்டு விளையாட முடியவில்லை. ஆனால், அதை நேரடியாக ஒப்புக்கொள்ளாமல் சப்பைக்கட்டு கட்டி இருந்தார்.

இந்த டி20 தொடரின் முதல் போட்டியின் முடிவில் புகை மூட்டமாக இருந்ததால் தன்னால் வருண் சக்கரவர்த்தியின் பந்துவீச்சை சரியாக ஆட முடியவில்லை என்று கூறி இருந்தார். அதன் பின் இரண்டாவது போட்டியில் அவர் ஆட்டம் இழந்ததை அடுத்து அவரை முன்னாள் வீரர்கள் கிண்டலடித்து இருந்தனர்.

இந்த நிலையில் ஹாரி புரூக்கால் ஏன் வருண் சக்கரவர்த்தியின் பந்துவீச்சில் சரியாக ஆட முடியவில்லை? என ரவிச்சந்திரன் அஸ்வின் விளக்கி இருக்கிறார். இது பற்றி பேசிய அஸ்வின், “சென்னையில் எந்த புகை மூட்டமும் இல்லை ஹாரி புரூக் அதற்கு முன்பு கொல்கத்தாவில் புகைமூட்டம் இருப்பதாக கூறி இருந்தார். அதனால் வருண் சக்கரவர்த்தியின் பந்துவீச்சை அடித்து ஆடுவது சிரமமாக இருந்ததாக சுட்டிக்காட்டி இருந்தார்.”

“நான் ஹாரி புரூக்-கிற்கு ஒரு விஷயத்தை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். தயவு செய்து இதை புரிந்து கொள்ளுங்கள். வருண் சக்கரவர்த்தியால் லெக் ஸ்பின் அந்த அளவிற்கு வீச முடியாது. அவர் வீசுவது கூக்ளி. நீங்கள் பௌலிங் செய்யும்போது லெக் ஸ்டம்ப் பக்கம் நகர்ந்து நிற்பதால் அவரது பந்துவீச்சை சரியாக கணிக்க முடியவில்லை.”

“அதனால் நீங்கள் பவுல்ட் அவுட் ஆகி இருக்கிறீர்கள். நீங்கள் ஸ்டெம்பை மறைத்து நின்று கொண்டு பெரிய ஷாட் ஆட முயன்றீர்கள். ஆனால் கூக்ளியை சரியாக கணிக்க முடியவில்லை. வெளிச்சம் எவ்வளவு இருக்கிறது என்பது முக்கியமே இல்லை. உங்களால் கூக்ளியை சரியாக கணித்து ஆட முடியவில்லை. அவர் பந்து வீசும் போது அவர் கைகளில் இருந்து பந்து எப்படி வருகிறது என்பதை நீங்கள் பார்க்கவில்லை.” இவ்வாறு ஹாரி புரூக்கின் ஆட்டத்தை அக்குவேறு, ஆணிவேராக பிரித்து விளக்கி இருக்கிறார் ரவிச்சந்திரன் அஸ்வின்.