வரலாற்றிலேயே இல்லாத மாபெரும் தோல்வி.. இரக்கம் காட்டாத ஆஸ்திரேலியா.. இன்னிங்ஸ் தோல்வி அடைந்த இலங்கை
ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம், இலங்கை அணி தனது கிரிக்கெட் வரலாற்றிலேயே மோசமான தோல்வியை தழுவி இருக்கிறது.
அதிலும் சொந்த மண்ணில் இந்த படுதோல்வியை சந்தித்து உள்ளது இலங்கை. ஆஸ்திரேலிய அணிக்கு ஆசிய மண்ணில் இதுவே மிகப்பெரிய வெற்றி ஆகும்.
ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இன்னிங்ஸ் வெற்றிகள் :
1. இன்னிங்ஸ் மற்றும் 360 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, ஜோகன்னஸ்பர்க், 2002
2. இன்னிங்ஸ் மற்றும் 332 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்துக்கு எதிராக, பிரிஸ்பேன், 1946
3. இன்னிங்ஸ் மற்றும் 259 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, போர்ட் எலிசபெத், 1950
4. இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கைக்கு எதிராக, கல்லே, 2025
5. இன்னிங்ஸ் மற்றும் 226 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவுக்கு எதிராக, பிரிஸ்பேன், 1947
இலங்கையின் மிகப்பெரிய இன்னிங்ஸ் தோல்விகள் :
1. இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, கல்லே, 2025
2. இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவுக்கு எதிராக, நாக்பூர், 2017
3. இன்னிங்ஸ் மற்றும் 229 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, கேப் டவுன், 2001
4. இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக, கொழும்பு, 2023
5. இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவுக்கு எதிராக, மொஹாலி, 2022
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 654 ரன்கள் குவித்தது. உஸ்மான் கவாஜா 232 ரன்களையும், ஸ்டீவ் ஸ்மித் 141 ரன்களையும், தனது அறிமுகப் போட்டியில் விளையாடிய ஜோஷ் இங்லிஸ் 102 ரன்களையும் சேர்த்து இருந்தனர்.
அடுத்து ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 165 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணி முதல் இன்னிங்ஸில் 489 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்தது. இதை அடுத்து ஆஸ்திரேலியா, இலங்கைக்கு ஃபாலோ ஆன் கொடுத்தது. இரண்டாவது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 247 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதன் முடிவில் இலங்கை அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிப் பட்டியலில் ஆஸ்திரேலிய ஏற்கனவே இரண்டாம் இடத்தில் இருந்தது. இந்தப் போட்டிக்கு பிறகு அந்த இடத்தை தொடர்ந்து தக்க வைத்துள்ளது.
தற்போது ஆஸ்திரேலியா 65.74 என்ற வெற்றி சதவீதத்துடன் உள்ளது. 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் அந்த அணி தகுதி பெற்றுவிட்டது. முன்பு நான்காம் இடத்தில் இருந்த இலங்கை அணி இந்த புள்ளிப் பட்டியலில் தற்போது ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது. இலங்கை அணி தான் ஆடிய 12 டெஸ்ட் போட்டிகளில் 5 வெற்றிகள் மற்றும் 7 தோல்விகளை சந்தித்து 41.67 என்ற வெற்றி சதவீதத்துடன் ஆறாவது இடத்தில் உள்ளது.