என்னை நாடு திரும்ப கூடாது என்று மிரட்டினார்கள்.. தமிழக கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி புகார்

என்னை நாடு திரும்ப கூடாது என்று மிரட்டினார்கள்.. தமிழக கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி புகார்

இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது நம்பர் ஒன் சுழற்பந்துவீச்சாளர் என்ற பெயரை தமிழக கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி பெற்றிருக்கிறார். அண்மையில் நடைபெற்ற சாம்பியன் டிராபி தொடரில் கூட வருண் சக்கரவர்த்தி ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு மிகவும் முக்கிய பங்காற்றினார்.

இந்த நிலையில் வருண் சக்கரவர்த்தி தமக்கு மிரட்டல் வந்தது குறித்து வெளிப்படையாக அறிவித்திருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “எனக்கு தற்போது நடைபெறும் நல்ல விஷயங்கள் எல்லாம் கொஞ்சம் கூட நம்ப முடியவில்லை.”

“இதை நான் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று நினைக்கின்றேன். என் வாழ்க்கையில் நான் சில பின்னடைவுகளை சந்தித்து இருக்கின்றேன். நம் மீது வைக்கப்படும் விமர்சனம் எவ்வளவு மோசமானதாக இருக்கும் என்று எனக்கு நன்றாக தெரியும். 2021 டி20 உலகக் கோப்பை தொடரில் நான் சரியாக விளையாடவில்லை.”

“அதன் பிறகு எனக்கு மிரட்டல் நிறைய வந்தது. என்னை பலரும் மிரட்டினார்கள். நாடு திரும்பக் கூடாது என்று கூறினார்கள். என்னுடைய வீட்டிற்கு வந்து என்னை தேடுவார்கள்.சில சமயம் நான் என் வீட்டில் மறைந்து கொள்வேன். நான் விமான நிலையத்திலிருந்து வீடு திரும்பியபோது பைக்கில் சிலர் என்னை பின் தொடர்ந்து வந்தார்கள். இது எல்லாம் நடந்திருக்கிறது.”

“ரசிகர்கள் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள் என்று எனக்கு தெரியும். ஆனால் கடந்த காலத்தில் நடந்ததையும் தற்போது எனக்கு கிடைக்கும் பாராட்டையும் நினைத்துப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக தான் இருக்கின்றது. உண்மையில் கடந்த காலம் எனக்கு மிகவும் கருப்பு நாள்கள் நிறைந்ததாக தான் இருந்தது.”

“நான் மன அழுத்தத்திற்கு ஆளானேன். என்னுடைய திறமைக்கான நியாயத்தை என்னால் செய்ய முடியவில்லை என்று வருத்தப்பட்டேன். டி20 உலக கோப்பை தொடரில் நான் சிறப்பாக செயல்படுவேன் என்று தான் என்னை எடுத்தார்கள். ஆனால் நான் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. அதன் பிறகு மூன்று ஆண்டுகளாக நான் இந்திய அணிக்கு தேர்வாகவில்லை.”

“நான் இந்திய அணிக்கு அறிமுகமாவதற்கு கூட இவ்வளவு கஷ்டப்பட்டது கிடையாது. ஆனால் மீண்டும் கம்பேக் கொடுக்க கடுமையாக போராடினேன். 2021 ஆம் ஆண்டுக்கு பிறகு என்னுடைய கிரிக்கெட்டில் நான் பல மாற்றங்களை செய்து கொண்டேன். பயிற்சி செய்யும் முறையிலும் மாற்றம் செய்தேன். முன்பெல்லாம் நான் ஒவ்வொரு பயிற்சி முகாமிலும் 50 பந்துகளை வீசுவேன்.”

“ஆனால் தற்போது 100 பந்துகளை வீசி வருகின்றேன். தேர்வு குழுவினர் என்னை சேர்ப்பார்களா இல்லையா என்பதெல்லாம் தெரியாது. ஒரு கட்டத்தில் எல்லாம் இனி முடிந்துவிட்டது என்று நினைத்தபோதுதான், ஐபிஎல் கோப்பையை வென்றோம். அதன்பிறகு மீண்டும் எனக்கு இந்திய அணியில் இடம் கிடைத்திருக்கிறது. இது எனக்கு மகிழ்ச்சி தான்” என்று வருண் சக்கரவர்த்தி கூறியுள்ளார்.

Previous articleகம்பீர் சொன்னால் தான் கேப்டன் பதவி.. பல்டி அடித்த பிசிசிஐ..
Next article“எனக்கு டெஸ்ட் போட்டி ஆடணும்னு ஆசை ஆனா முடியாது ஏனென்றால்”.. வருண் சக்கரவர்த்தி ஓபன் டாக்