வரலாறு படைத்த ஸ்ரேயாஸ் ஐயர்.. எந்த ஐபிஎல் கேப்டனும் செய்யாத பிரம்மாண்ட ரெக்கார்டு
2025 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக முதல் போட்டியிலேயே களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் இரண்டு முக்கிய சாதனைகளைச் செய்திருக்கிறார். ஐபிஎல் வரலாற்றிலேயே மூன்று அணிகளுக்கு கேப்டனாக இருந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையைச் செய்திருக்கிறார்.
2025 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக அஜிங்க்ய ரஹானே களமிறங்கிய நிலையில், அடுத்ததாக ஸ்ரேயாஸ் ஐயர் இந்த சாதனையைச் செய்திருக்கிறார். இதற்கு முன் குமார் சங்ககாரா, மஹிளா ஜெயவர்தனே மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் மூன்று ஐபிஎல் அணிகளின் கேப்டனாக செயல்பட்டுள்ளனர். அவர்களுடன் தற்போது அஜிங்க்யா ரஹானே மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இணைந்துள்ளனர்.
ஸ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் கேப்டனாக மற்றுமொரு சாதனையையும் செய்திருக்கிறார். பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக தனது முதல் போட்டியில் அவர் அதிரடியாக விளையாடி 42 பந்துகளில் 97 ரன்களைச் சேர்த்தார். கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம், தான் கேப்டனாக அறிமுகமான மூன்று போட்டிகளிலும் மூன்று அரை சதங்களை அடித்திருக்கிறார்.
அதாவது, பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் என தான் கேப்டனாக இருந்த மூன்று ஐபிஎல் அணிகளிலும் தனது கேப்டன்சி அறிமுகப் போட்டியில் அரை சதத்தை அடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி, இதில் இரண்டு முறை 90 ரன்களுக்கும் அதிகமான ஸ்கோரையும் எடுத்திருக்கிறார்.
2018 ஆம் ஆண்டு டெல்லி கேப்பிட்டல் அணியின் கேப்டனாக அறிமுகமான போது அவர் 93 ரன்களை அடித்திருந்தார். அடுத்து தற்போது பஞ்சாப் கேப்டனாக தனது அறிமுகத்தில் 42 பந்துகளில் 97 ரன்களை அடித்திருக்கிறார். இந்த சாதனைகளை வேறு எந்த ஐபிஎல் கேப்டனும் செய்ததில்லை.
இந்த சாதனைகளால் பஞ்சாப் கிங்ஸ் அணியும் வெற்றி பெற்றது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் எடுத்தது. இதில் ஸ்ரேயாஸ் ஐயர் 97 ரன்களும், பிரியான்ஷ் ஆர்யா 23 பந்துகளில் 47 ரன்களும், ஷஷாங்க் சிங் 16 பந்துகளில் 44 ரன்களும் எடுத்தனர்.
அடுத்து பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி ஒரு கட்டத்தில் வெற்றியை நோக்கி நெருங்கிய போதும், கடைசி நேரத்தில் ரன் குவிக்க முடியாமல் ஆட்டத்தின் முடிவில் 20 ஓவர்கள் 5 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்கள் மட்டுமே எடுத்தது. பஞ்சாப் கிங்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
செய்தி சுருக்கம்:
2025 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் கேப்டனாக களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் இரண்டு சாதனைகள் படைத்தார்.
ஐபிஎல் வரலாற்றில் மூன்று அணிகளுக்கு கேப்டனாக இருந்த இரண்டாவது இந்திய வீரர் ஆனார்.
அஜிங்க்ய ரஹானேவுக்குப் பிறகு இந்த சாதனையை ஸ்ரேயாஸ் ஐயர் நிகழ்த்தினார்.
கேப்டனாக அறிமுகமான போட்டியில் மூன்று ஐபிஎல் அணிகளிலும் அரை சதம் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக முதல் போட்டியில் 42 பந்துகளில் 97 ரன்கள் எடுத்தார்.
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.