அஸ்வினுக்கு எல்லாம் கேப்டன் பதவி கொடுக்க முடியாது.. சிஎஸ்கே கறார் முடிவு.. ஏன் இப்படி?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ருதுராஜ் கெய்க்வாட் நீக்கப்பட்டு, மீண்டும் தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், அந்த அணியில் இருக்கும் மூத்த வீரரான அஸ்வினுக்கு கேப்டன் பதவி அளித்திருக்கலாமே என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அஸ்வின் இதற்கு முன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு இரண்டு ஆண்டுகள் கேப்டனாக செயல்பட்டிருக்கிறார். 2018 மற்றும் 2019 ஐபிஎல் தொடர்களில் அவர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 2024 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக தோனி கேப்டன் பதவியிலிருந்து விலகி ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு கேப்டன்சியை வழங்கியிருந்தார்.
இந்த நிலையில், தோனிக்கு மீண்டும் பணிச்சுமையை அளிக்கும் வகையில் மீண்டும் கேப்டன் பொறுப்பை சிஎஸ்கே நிர்வாகம் அளித்திருப்பது சரியல்ல என சிலர் கூறி வருகின்றனர். ருதுராஜ் விளையாட முடியாத நிலையில் வேறொரு வீரரைத்தான் கேப்டனாக நியமித்திருக்க வேண்டும், தோனியை நியமித்திருக்கக்கூடாது என சில ரசிகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஆனால், அஸ்வினை ஏன் கேப்டனாக சிஎஸ்கே நிர்வாகம் தேர்வு செய்யவில்லை என்று பார்க்கலாம். ரவிச்சந்திரன் அஸ்வின் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்டார். அப்போது அவரது தலைமையில் அந்த அணி 28 போட்டிகளில் விளையாடியது. அதில் 12 வெற்றிகள் மட்டுமே பெற்றது; 16 போட்டிகளில் பஞ்சாப் அணி தோல்வி அடைந்திருந்தது.
அதன் முடிவில், அஸ்வின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிலிருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மாற்றப்பட்டார். ஒரு அணியின் கேப்டனை அணிமாற்றம் செய்தது அப்போது சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. எனவே, அஸ்வின் கேப்டனாக சிறப்பாக செயல்படவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
மேலும், அவருக்கு தற்போது 38 வயதாகிறது. அவர் இன்னும் சில ஆண்டுகள் மட்டுமே கிரிக்கெட் விளையாடுவார். மேலும், சிஎஸ்கே விளையாடும் போட்டிகளில் மாற்றம் செய்ய வேண்டி இருந்தால் அஸ்வினை பிளேயிங் லெவனில் இருந்து நீக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படலாம்.
இதுபோன்ற காரணங்களால்தான் அஸ்வினுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவி அளிக்கப்படவில்லை. தோனி இதற்கு முன் சிஎஸ்கே-வின் கேப்டனாக வெற்றிகரமாக செயல்பட்டுள்ளார். அந்த அணிக்கு ஐந்து முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.
மேலும், தற்போது சிஎஸ்கே அணி ஐந்து போட்டிகளில் விளையாடி, நான்கு தோல்விகளை சந்தித்திருக்கும் நிலையில், தோனி மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டால் அது அந்த அணிக்கு மிகப்பெரிய உத்வேகத்தை அளிக்கும். இந்த காரணங்களால்தான் அஸ்வினையோ அல்லது வேறு வீரர்களையோ சிஎஸ்கே அணி நிர்வாகம் கேப்டனாக நியமிக்கவில்லை.