பதற்றம் அடைந்த உடனே அந்த விசயத்தை தான் செய்தேன்..ஸ்டார்க்கால் மட்டுமே அது முடியும்- அக்சர்
ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் டெல்லி அணியின் கேப்டனாக அக்சர் பட்டேல் நியமிக்கப்படுகிறார் என்ற செய்தி வந்த உடனே பலரும் அதை விமர்சித்தார்கள். அக்சர் பட்டேல் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டது நல்ல முடிவு கிடையாது என்று பலரும் வலியுறுத்தி இருந்தனர்.
இந்த நிலையில் அக்சர் பட்டேல் தலைமையிலான டெல்லி அணி 6 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி ஒரு தோல்வியை தழுவி தற்போது புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கூட பவுண்டரிகளை சரியான முறையில் அக்சர் பட்டேல் மாற்றியதும் ரசிகர்களின் கவனத்தை பெற்றது.
வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள அக்சர் பட்டேல், “கடைசியில் எல்லாம் நன்றாக முடிந்து விட்டது. நாங்கள் நினைத்த மாதிரி தொடக்கத்தை இந்த போட்டியில் பெறவில்லை. இதனால் கொஞ்சம் அதிரடியாக விளையாட வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் ராகுலும் போரெலும் ஆடுகளம் அவ்வளவு சுலபமானதாக இல்லை என்று கூறினார்கள்.”
“எனினும் 12-வது மற்றும் 13-வது ஓவரில் எங்களுக்கு கிடைத்த உத்வேகத்தை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு நல்ல ஒரு இலக்கை நாங்கள் நிர்ணயித்தோம். ஆடுகளம் கொஞ்சம் குறைவாக இருந்ததால், புது பேட்ஸ்மேன்கள் ரன்கள் சேர்க்க தடுமாறினார்கள். ராஜஸ்தான் அணியும் அதிரடியாக விளையாடி சேர்த்தபோது, எங்களுக்கு பதற்றம் கொஞ்சம் தொற்றிக் கொண்டது.”
“உடனே அதனை தணிப்பதற்காக டைம் அவுட் எடுத்தோம். அப்போது இதன்பிறகு ராஜஸ்தான் அணியால் பவுண்டரி அடிப்பது கடினம். எனவே நம்பிக்கையை இழக்காதீர்கள். விக்கெட்டை எடுக்க முயற்சி செய்யுங்கள் என்று அணி வீரர்களிடையே கூறினேன். நன்றாக விளையாடிக் கொண்டிருக்கும் பேட்ஸ்மேன்கள் ஆட்டம் இழந்ததால் புதிதாக வரும் பேட்ஸ்மேன்களுக்கு பதற்றம் ஏற்படும்.”
“இதனை குறைப்பதற்காக அவர்கள் வேகமாக ரன்கள் சேர்த்து ஆட்டம் இழப்பார்கள். இதுதான் ராஜஸ்தான் அணிக்கு நடந்தது. இந்த ஆண்டு நான் நினைத்த மாதிரி சிறப்பாக பந்து வீசவில்லை. ஆனால் அணி வெற்றி பெறுவதால் என்னுடைய நம்பிக்கையும் அதிகரித்திருக்கிறது. அணியை தற்போது வழி நடத்துவதால் அணிக்கு நான் ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்.”
“இதற்காக தொடர்ந்து பயிற்சியில் நான் ஈடுபட்டு வருகின்றேன். ஸ்டார்க் அவருடைய திட்டத்தை செயல்படுத்த முடிந்தால் நிச்சயம் நாங்கள் போட்டிக்குள் வருவோம் என்று எனக்கு தெரியும். 20 வது ஓவர் மற்றும் சூப்பர் ஓவர் என 12 பந்துகளில் 12 யாக்கர்களை வீசி இருக்கிறார். இதனால் தான் அவர் ஒரு ஜாம்பவான் வீரராக திகழ்கிறார்” என்று அக்சர் பட்டேல் பாராட்டியுள்ளார்.