வங்கதேசத்துக்கு மிகப்பெரிய அவமானம்.. நாகினிக்கு இது தேவை தான்..கத்துக்குட்டியிடம் தோல்வி
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் பெரிய அளவில் எந்த ஒரு சாதனையும் செய்யாமல் ஏதோ 10 உலக கோப்பையை வாங்கி விட்டது போல் சேட்டை செய்யும் ரசிகர்கள் என்றால் அது வங்கதேச ரசிகர்கள் தான். எப்படி ஐபிஎல் தொடரில் ஒரு ஆர்சிபியோ அதே போல் சர்வதேச கிரிக்கெட்டுக்கு வங்கதேச ரசிகர்கள்.
இந்த நிலையில் வங்கதேச அணி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த நாட்டு கிரிக்கெட் அணியுடன் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் யாருமே எதிர்பாராத வகையில் இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் வங்கதேச அணி தொடரை இழந்து மிகப்பெரிய அவமானத்தை சந்தித்து இருக்கிறது.
இதன் மூலம் டெஸ்ட் போட்டிகள் விளையாடும் ஒரு அணி ஐக்கு அரபு அமீரகத்துடன் தோல்வி அடைந்தது இதுவே முதல் முறையாகும். இந்த தொடரில் முதல் டி20 போட்டியை வங்கதேச அணி வெற்றி பெற்ற நிலையில் அடுத்த இரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவி தொடரை இழந்து இருக்கிறது.
வங்கதேச அணி கத்துக்குட்டி அணிகளுடன் தொடரை இழப்பது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே 2024 டி20 உலகக்கோப்பைக்கு முன் அமெரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரில் வங்கதேச அணி தோல்வியை தழுவியது. இதன் மூலம் ஒரு டெஸ்ட் விளையாடும் அணி, இரண்டு அசோசியேட் அணிகள் உடன் தொடரை இழந்து தோல்வியை தழுவியது இதுவே முதல் முறையாகும்.
மூன்றாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 162 ரன்களை எடுத்த நிலையில், அதனை யுஏஇ அணி 19.1 வது ஓவரெல்லாம் எட்டியது. தொடக்க வீரர் முஹம்மது சுகைப் 29 ரன்களும், அலீசான் சராபு 68 ரன்கள் எடுக்க யுஏஇ அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்ற யுஏஇ அணியில் கேப்டன் முகமது வசீம் அதிகபட்சமாக 145 ரன்கள் அடித்திருந்தார்.
இதில் இரண்டு அரை சதம் அடங்கும். இதன் மூலம் தொடர் நாயகன் விருதை அவர் வாங்கினார். இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள முகமது வசீம், எங்கள் அணி நிர்வாகம் மற்றும் பயிற்சியாளர் குழு அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். நாங்கள் இன்று வரலாற்று சாதனை படைத்திருக்கின்றோம். இந்த தொடர் என்பது எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்த வெற்றியை வார்த்தைகளால் எங்களால் வர்ணிக்க முடியவில்லை. அனுபவம் இல்லாத பலவீரர்கள் எங்கள் அணிக்குள் வந்து சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். அறிமுக போட்டியில் ஹைதர் அலி அபாரமாக செயல்பட்டு இருக்கிறார். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நாங்கள் நம்பிக்கையை கொஞ்சம் கூட இழக்காமல் தான் இருக்கின்றோம். முதல் முறையாக ஆட்டநாயகன் விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது.
இந்த விருதை என்னுடைய மகனுக்கு நான் அர்ப்பணிக்கிறேன் என்று வசீம் தெரிவித்துள்ளார். வங்கதேச அணி தொடர்ந்து கத்துக் குட்டி அணிகளுடன் தோல்வியை தழுவி வருவது அந்நாட்டு ரசிகர்களை எரிச்சல் அடைய செய்திருக்கிறது. வங்கதேச அணியின் மூத்த வீரர்கள் இருந்தும், தோல்வியை தழுவி இருப்பது குறிப்பிடத்தக்கது.