IPL 2025 பிளே ஆஃப்: எந்தெந்த அணிகள் மோதல்? முழு அட்டவணை, தேதி, அணி விவரம்
2025 ஐபிஎல் தொடரின் லீக் சுற்று முடிவடைந்துள்ள நிலையில், முதல் நான்கு இடங்களைப் பிடித்திருக்கும் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன. இந்த நான்கு அணிகளும் பிளே ஆஃப் சுற்றில் எந்தெந்தப் போட்டிகளில் விளையாடுகின்றன என்ற அட்டவணை தற்போது வெளியாகி உள்ளது.
அதன்படி, புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணியும், இரண்டாவது இடத்தில் இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் (Qualifier 1) விளையாடுகின்றன. இந்தப் போட்டி மே 29 அன்று வியாழக்கிழமை முல்லான்பூர் மைதானத்தில் நடைபெற உள்ளது.
அடுத்து, மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களைப் பிடித்திருக்கும் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தகுதி நீக்கப் போட்டியில் (Eliminator) மோத உள்ளன. இந்தப் போட்டி மே 30 அன்று முல்லான்பூர் மைதானத்தில் நடைபெற உள்ளது.
முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் தோல்வியடைந்த அணியும், எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெற்ற அணியும் இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியில் (Qualifier 2) மோதும். இந்தப் போட்டி ஜூன் 1 அன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.
இறுதிப் போட்டியில், முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் வென்ற அணியும், இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியில் வென்ற அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டி ஜூன் 3 அன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் துவக்கத்தில், மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ரிஷப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்பட்ட லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி மீதும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இதில் மும்பை இந்தியன்ஸ் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. அதிலும் அந்த அணி நான்காவது இடத்தைப் பிடித்துதான் முன்னேறி இருக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் பத்தாவது இடத்தையும், கடந்த ஆண்டு ஐபிஎல் கோப்பை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எட்டாவது இடத்தையும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆறாவது இடத்தையும் பிடித்துள்ளன. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஏழாவது இடத்தை மட்டுமே பிடித்துள்ளது.
இந்த ஆண்டு யாரும் பெரிய எதிர்பார்ப்பை வைக்காத பஞ்சாப் கிங்ஸ் அணி அதிரடியாக புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தது. மேலும், கடந்த ஆண்டு பிளே ஆஃப் சுற்று வரை முன்னேறியிருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்த ஆண்டும் சிறப்பாக விளையாடி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தையும் பிடித்திருக்கிறது.
குஜராத் டைட்டன்ஸ் அணி மூன்றாவது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. அந்த அணி துவங்கப்பட்டு நான்கு ஆண்டுகளில் மூன்று முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.