கண்டி திரித்துவக் கல்லூரிக்கும் புனித அந்தோனியார் கல்லூரிக்கும் இடையிலான 107-வது மலைநாட்டு நீல வர்ணங்களின் சமர் (Battle of the Blues) கிரிக்கெட் போட்டியில் திரித்துவக் கல்லூரி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
திரித்துவக் கல்லூரி வெற்றி பெற ஒரு ஓட்டம் மாத்திரமே தேவைப்பட்ட நிலையில், புனித அந்தோனியார் கல்லூரி வீரர்கள் களத்திற்கு வர மறுத்ததை அடுத்து நடுவர்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அஸ்கிரிய சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், இரு அணிகளினதும் ஓட்டங்கள் சமநிலையை எட்டிய போது, இரசிகர்கள் மைதானத்திற்குள் நுழைந்ததால் நடுவர்கள் மற்றும் பார்வையாளர்களிடையே குழப்பம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து வீரர்கள் பாதுகாப்பாக மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
சிறிது நேரத்தின் பின்னர், போட்டியை மீண்டும் ஆரம்பிக்க புனித அந்தோனியார் கல்லூரி அணி மைதானத்திற்கு வரத் தவறியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, புனித அந்தோனியார் கல்லூரி போட்டியை இடைநடுவில் கைவிட்டதாக தீர்மானித்த நடுவர்கள், திரித்துவக் கல்லூரி வெற்றி பெற்றதாக அறிவித்தனர்.
இலங்கை இளையோர் அணியின் வீரர் அத்ஹம் ஹில்மியின் சதம் மற்றும் கனில்க அந்தோனியின் 10 விக்கெட் பிரமாதமான பந்துவீச்சு ஆகியவற்றின் உதவியுடன், 2012 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக இந்த பாரம்பரிய மகா போட்டியில் திரித்துவக் கல்லூரி ஒரு நேரடி வெற்றியைப் பதிவு செய்தது.
கடந்த வியாழக்கிழமை (12) ஆரம்பமான இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற திரித்துவக் கல்லூரித் தலைவர் திமந்த மஹவிதான முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தார். கடும் வெப்பத்திற்கு மத்தியில் அந்தோனியார் கல்லூரி வீரர்கள் ஓட்டங்களைக் குவிக்க தடுமாறினர். ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சிசல் ஹேமக ஆட்டமிழக்காமல் 64 ஓட்டங்களைப் பெற்ற போதிலும், அந்தோனியார் கல்லூரி முதல் இன்னிங்ஸில் 157 ஓட்டங்களுக்கு சுருண்டது. கௌஷிக குமாரசிங்க 44 ஓட்டங்களைப் பெற்றார். திரித்துவக் கல்லூரி சார்பில் கனில்க அந்தோனி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
பதிலுக்குத் துடுப்பாடிய திரித்துவக் கல்லூரி தனது முதல் இன்னிங்ஸில் 264 ஓட்டங்களைப் பெற்று, 107 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது. அத்ஹம் ஹில்மி அபாரமாக விளையாடி 125 ஓட்டங்களைக் குவித்தார். தலைவர் மஹவிதான 54 ஓட்டங்களைப் பெற்றார்.
தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த புனித அந்தோனியார் கல்லூரி 170 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. கௌஷிக குமாரசிங்க அதிகபட்சமாக 59 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் கனில்க அந்தோனி 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதன்படி, 64 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கித் துடுப்பாடிய திரித்துவக் கல்லூரி, ஒரு விக்கெட்டை இழந்து 63 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் இரசிகர்கள் மைதானத்திற்குள் புகுந்தனர். இதன் பின்னரே அந்தோனியார் கல்லூரி அணி மீண்டும் விளையாட மறுத்ததால், நடுவர்கள் திரித்துவக் கல்லூரியை வெற்றியாளராக அறிவித்தனர்.







