முகம்மது றிஸ்வான்….Behind the Stump வீரன் 

பாக்கிஸ்தான் கிரிககெட் தனது வரலாற்றில் இது வரை பல அற்புதமான விக்கெட் காப்பாளர்களை கண்டிருக்கின்றது. பல விக்கெட் காப்பாளர்கள் Behind the Stump நிறைய மெஜிக் செய்திருக்கின்றார்கள். முயின்கானின் மின்னல் வேகத்தைய ஸ்டம்பிங்குகள் இன்னும் கண்ணுக்குள்ளேயே கிடக்கின்றது. அதி வேக ஸ்ட்ம்பிங்குகள், அற்புதமான பல ரிப்ட் கெட்ச்சுகள், டைவிங் கெட்ச்சுகள் என்று ஏகப்பட்ட மெஸ்மரிச வித்தைகள் புரிந்திருக்கின்றார்கள் அவர்கள்.

வஸீம் பாரி, முயீன் கான், கமரன் அக்மல், சர்பராஸ் அகமது, இம்தியாஸ் அஹமது, ரஷீத் லெத்தீப், சலீம் யூசுப் அத்னான் அக்மல், ஹுமாயுன் பர்ஹாத், முகம்மது சல்மான், நதீம் அப்பாஸி, துல்கர்னைன் சைதி என்று இது வரைழ பல விக்கெட் கீப்பாளர்களை கண்டிருக்கின்றது. எல்லாருமே ஒரு விதத்தில் தமது திறமைகளை சர்வதேச கிரிக்கெட் அரங்கில் காட்டியவர்கள்தான். ஆனால் முயீன் கான், கமரன் அக்மல் ஓரளவுக்கு சர்பராஸ் அகமது தவிர மற்றெல்லா கீப்பர்களும் துடுப்பாட்டத்தை பொறுத்த வரையில் சுமார்தான்.

மோயின் கான், சர்பராஸ் அஹமது போன்றவர்கள் கூட துடுப்பாட்டத்தை பொறுத்த வரை ஆகா ஓகோ ரகம் கிடையாது. எப்போதாவது சோபிப்பார்க்ள…பல தடவைகளில் சொதப்பியிருப்பார்கள்.

பாக்கிஸ்தான் கிரிக்கெட்டுக்கு இது வரை துடுப்பாட்டத்தில் நாக்கு முக்கா நாக்கு முக்கா டங்கா மாரி ஊதாரி டைப்பில் பெட்டிங்கில் சம்பவம் செய்கின்ற அற்புதமான கீப்பர்கள் இது வரை கிடைக்கவேயில்லை என்றுதான் நான் சொல்லுவேன்.

ஸ்டம்புகளுக்குப் பின்னால் இந்த விக்கெட் காப்பாளர்களது பணி வாவ் ரகமென்றாலும் துடுப்பாட்டத்தில் எல்லாருமே சுமார்தான். விதிவிலக்கான சந்தர்ப்பங்கள் தவிர பல விக்கெட் காப்பாளர்களது துடுப்பாட்டம் சொல்லிக் கொள்ளுகின்ற அளவுக்கு இல்லை என்பதுதான் உண்மை. ஆனால் பாக்கிஸ்தானின் துடுப்பாட்ட ப்ளஸ் கீப்பிங் வீரனுக்கான அந்த நீண்ட காலத்தைய மெகா இடைவெளியை ஓரளவுக்கேனும் நிரப்புவார் என்ற நம்பிக்கையை தந்து கொண்டிருக்கின்றார் மூன்று ஃபோர்மெட்களிலும் ஓரளவுக்கேனும் கில்லிடியத்துக் கொண்டிருக்கின்ற பாக்கிஸ்தான் கிரிக்கெட்டின் தற்போதைய விக்கெட் காப்பாளர் முகம்மது றிஸ்வான்.

இலங்கையின் சங்கக்கார அவுஸ்திரேலிய கில்கிறிஸ்ட் தென்னாபிரிக்க மார்க் பவுச்சர் இந்தியாவின் மகி என்ற அந்த வரிசை இன்னமும் அப்படியேதான் இன்றைய சம கால கிரிக்கெட்டில் இடை வெளி நிரப்புக என்று சொல்லியவாறு நின்று கொண்டிருக்கின்றது. இந்தியாவில் தற்போது ரிஷப் பாண்ட் மஹியின் இடத்தை மெல்ல நிரப்பிக் கொண்டிருக்கின்றார். அந்த வரிசையில் தலைவா நானும் அந்த வழியால்தான் வந்து கொண்டிருக்கின்றற்ன என்று தந்தியடித்துக் கொண்டிருக்கின்றார் பாக்கிஸ்தானின் முகம்மது றிஸ்வான்.

றிஸ்வான் துடுப்பெடுத்தாடிய கடந்த ஐந்து டீ டுவன்டி போட்டிகளில் அவரது ஸ்கோர் 74, 42, 51, 104 மற்றும் 89 என்று ஹேட்ஸ் ஓஃபுக்காக கைகளை நீட்டிக் கொண்டிருக்கின்றன. றிஸ்வானின் ஆட்டத்தை தொடர்ந்து அவதானித்து வருகின்ற ஒரு கிரிக்கெட் டோப்புக்காரன் என்ற அடிப்படையில் ஒவ்வொரு போட்டியிலும் தனது Consistency and Temparament னை மனுஷன் கண்ட மேனிக்கு தனது பெட்டில் கரைத்து போட்டு வெயிட் ஏற்றிக் கொண்டேயிருக்கின்றார்.

அவசரப்படாமல் அதே நேரம் ஆக்ரோஷமாக ஆடுகின்றார். ஸ்ட்ரைக் ரேட்டை ரொட்டேட் பண்ணுவதில் றிஸ்வானின கவனம் சிலிர்க்க வைக்கின்றது.

சங்கா போன்றவர்கள் களத்துக்கு துடுப்பெடுத்தாட வருகின்ற போது என்ன மாதிரியான உணர்வு ஏற்படுமோ மகேந்திரசிங் தோனி களத்துக்கு வருகின்ற போது என்ன மாதிரியான எதிர்பார்ப்பும் இதயத்துடிப்பின் துள்ளலும் உருவாகுமோ அப்படியொரு எதிர்பார்ப்பினை களத்துக்கு ஆட வருகின்ற போதே கல்பில் உருவேற்றுகின்ற பணியை டச்சப் பண்ணுகின்றார் றிஸ்வான்.

முயீன்கான் மற்றும் கமரன் அக்மல் போன்ற விக்கெட் காப்பாளர்கள் துடுப்பெடுத்தாட களத்துக்கு வருகின்ற போது இவர்கள் ஏதவாது சம்பவம் செய்வார்கள் என்று ஒரு எதிர்பார்ப்பு மனசுக்குள்ளே ஒரு பூனைக் குட்டி போல கிடந்து குதிக்கும். ஏனைய பாக்கிஸ்தானிய விக்கெட் காப்பாளர்கள் மீது அந்தளவுக்கு ஆ ஊ என்று பெரிதாக எதுவுமே ஏற்படுவது கிடையாது. அவர்கள் துடுப்பெடுத்தாடுவார்க்ள. ஆனால் பெரிய ஸ்கோர்களை அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது என்று மனசு சொல்லி விடும்.

ஆனால் இன்று றிஸ்வான் துடுப்படுத்தாட களத்துக்கு வருகின்ற போது இவன் தனியொருவன், இவன் வேற மாதிரி என்று எண்ண வைக்கின்றார். றிஸ்வானின் அற்புதமான ஒரு இன்னிங்சை நான் இங்கே பகிர்ந்தேயாக வேண்டடும்.

2021 பெப்ரவரி 4 தொடக்கம் 8ம் திகதி வரை பாக்கிஸ்தான் ராவல்பிண்டியில் இடம் பெற்ற பாக்கிஸ்தான் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாக்கிஸ்தான் முதல் இன்னிங்சுக்காக 272 ஓட்டங்களும் அதே போல தென்னாபிரிக்கா 201 ஓட்டங்களையும் பெற்றிருக்கும். பாக்கிஸ்தான் இரண்டவாது இன்னிங்சில் 76 ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து பரிதாபமாக தவித்துக் கொண்டிருந்த போது களத்துக்கு வருவார் றிஸ்வான். அன்றைய றிஸ்வானின் ஆட்டம் பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது. சுழற் பந்து வீச்சாளர்களுக்கு மிகவும் சாதகமாக இருந்த ராவல்பிண்டி ஆடுகளத்தில றிஸ்வான் மிக எளிதாக பந்துகளை எதிர் கொள்ளுவார். அடித்தாடுிகின்ற பந்துகளை கவனித்து நொறுக்குவார். அவ்வப்போது அவரால் நொறுக்கப்பட்ட பந்துகள் வலி தாளாது பவுன்டரி லைனில் போய் படுத்துக் கிடக்கும்.

இரண்டாம் இன்னிங்சில் றிஸ்வான் 204 பந்துகளை எதிர் கொண்டு மொத்தமாக 115 ஓட்டங்களை பெற்று கடைசி வரை ஆடு களத்தில அவுட்டேயாகமல் பாக்கிஸ்தானின் பத்தாவது விக்கெட்டாக சஹீன் அப்ரிடி லின்டேயின் பந்து வீச்சில் போல்ட் செய்யப்பட்டு ஆட்டமிழக்கின்ற போது வெளியேறிச் செல்லுவார். நான் கண்டு ரசித்த அற்புதமான டெஸ்ட் இன்னிங்சுகளில் இதுவும் ஒன்று. பாக்கிஸ்தான் இரண்டாவது டெஸ்டில் 95 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இந்த வெற்றியில் றிஸ்வானின் சதத்தின் பங்கு சாதாரணமானதல்ல.

டெஸ்ட் ஒரு நாள் போட்டிகள் மற்றும் டீ டுவன்டி என மூன்று ஃபோர்மெட்டிலும் சதங்கள் விலாசியவர்கள் பட்டியலில் றிஸ்வானின பெயரும் இருக்கின்றத. இன்றைய தேதிக்கு றிஸ்வான் மொத்தமாக 13 டெஸ்ட்களையும்; 35 ஒரு நாள் போட்டிகளையும் 30 டீடுவன்டி போடடிகளையும் ஆடியிருக்கின்றார். டெஸ்டில் றிஸ்வானீன சராசரி 44.35. ஒரு நாள் போட்டிகளில் 30.41 மற்றும் டீ டுவன்டியில் 36.50 என்று மூன்று ஃபோர்மட்களிலும் டீசன்டான சராசரியை வைத்திருக்கின்ற வளரும் பிள்ளை றிஸ்வான்.

தொடர்ந்து றிஸ்வானை அவதானித்து வருகின்றவன் என்ற அடிப்படையில் றிஸ்வானின் துடுப்பாட்ம் நாளாக நாளாக செதுக்கப்படுகின்ற சிலையாக மாறிக் கொண்டிருக்கின்றத. டாவின்ஸியின் ஓவியத்தை போல மெல்ல மெல்ல பிரகாசம் கூடிக் கொண்டேயிருக்கின்றது. நேரத்து கை கொடுக்கின்ற அவரது துடுப்பாட்டம் பாக்கிஸ்தானுக்கு கிடைத்த அண்மைக்கால வரப் பிரசாதம். பாபர் அசாம் பக்கர் சமான் பவாத் ஆலம் என்ற பாக்கிஸ்தானின் கிரிக்கெட் படையில் இணைந்திருக்கின்ற பெட்டிங் வேரியர் றிஸ்வான்.

கொஞ்சம் கூர்மையாக அவதானித்துப் பாருங்கள்…எங்கோ ஓரு அதள பாதாளத்தில் யாரும் கேட்பாரற்று வீழ்ந்து கிடந்த பாக்கிஸ்தானின் கிரிக்கெட் மெல்ல மெல்ல அண்மைக் காலமாக எழுச்சி கண்டு கொண்டிருப்பதனை. அந்த எழுச்சியை எழுதுகின்ற சேகுவராக்களில் றிஸ்வானும் இருக்கின்றார் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.
நேரத்துக்கு ஏற்றாற் போல தமது ஆட்டத்தை நிர்ணயித்து களத்தில் பொறுமையாக நின்று ஆடுகின்ற பெருங் கலையை றிஸ்வான் போன்ற பயமறியா இளங் கன்றுகள் தற்போது கற்றுத் தேர்ந்திருக்கின்றன.
பாக்கிஸ்தானின் றிஸ்வான்..இந்தியாவின் ரிஷப் பான்ட் போன்ற இளைஞர்கள் ஸ்டம்புகளுக்குப் பின்னால் கண் கொத்திப் பாம்பாக இருக்கினற அதே வேளை பேட்டிங்கில் பருந்துகளாக பாம்புப் பந்துகளையும் பவுன்டரி லைனுக்கப்பால் பறித்துச் செல்லுகின்றார்கள்.

ஒரு நீண்ட அற்புதமான இன்னிங்ஸ் றிஸ்வானுக்காக காத்துக் கிடக்கன்றது என்பதுதான் பேருண்மை.. கிரிக்கெட்டை எப்போதுமே ஒரு திருவிழாவாக பார்த்துப் பழக்கபட்ட நாங்களும்தான்.

கிண்ணியா சபருள்ளாஹ்
2021-04-12