சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் இடம்பெற்றுவரும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசேர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையிலான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்றைய போட்டியில் முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 151 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி முதல் 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 48 ஓட்டங்களை பெற்றாலும், அதன் பின்னர் சன் ரைசேர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு வலுவடைந்தது.
தமிழக வீரர் ஷங்கர் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார், இறுதி ஓவரை வீசிய புவனேஷ்வர் குமாரின் ஓவரில் பொல்லார்ட் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 17 ஓட்டங்களைக் குவிக்க, மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 150 ஓட்டங்களை பெற்றது.
இன்றைய போட்டியில் பொல்லார்ட் புதிய சாதனைக்கு சொந்தக்காரரானார்.
கெயில், டீ வில்லியர்ஸ் ஆகியோரை அடுத்து IPL போட்டிகளில் 200 சிக்ஸர்களை விளாசி சாதனை படைத்துள்ளார்.
கையில் – 351 (சிக்ஸர்கள்)
டீ வில்லியர்ஸ் – 231
ரோஹித் – 217
டோனி – 216
பொல்லார்ட் – 201
கோஹ்லி – 201
பதிலுக்கு 151 எனும் இலக்குடன் ஆடிய சன் ரைசேர்ஸ் ஹைதராபாத் அணிக்கு வழமையான அதே பிரச்சனை சிக்கலைக் கொடுத்தது.முன்னனி வீரர்கள் ஆட்டமிழந்தால் மத்திய வரிசையில் போட்டியைக் கொண்டு செல்ல தகுந்த வீரர்கள் இல்லாது தடுமாறுகிறார்கள்.
இன்றைய போட்டியிலும் கேன் வில்லியம்சன் சேர்க்கப்படவில்லை.
ஆரம்ப வீரர்களாக பெயர்ஸ்டோ மற்றும் வோர்னர் காலம் புகுந்தனர். பெயர்ஸ்டோ 4 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் அடங்கலாக 43 ஓட்டங்களை அதிரடியாக பெற்றார், வோர்னர் 36 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
ஆயினும் அதன் பின்னர் வந்த வீரர்கள் பெருமளவில் சோபிக்கவில்லை, தமிழக வீரர் விஜய் சங்கர் போராடி 28 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டாலும் இறுதியில் 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று அசத்தியது.
ராகுல் சஹார் 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும், பூம்ரா 14 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டையும் கைப்பற்ற, ட்ரெண்ட் போல்ட் 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
3 போட்டிகளில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 2 வெற்றிகளை பெற்றுள்ள நிலையில், சன் ரைசேர்ஸ் ஹைதராபாத் விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாளை பெங்களூர், கொல்கொத்தா அணிகள் 3.30 க்கும் பஞ்சாப், டெல்லி அணிகள் 7.30 க்கும் மோதவுள்ளன.