பாபர் அசாம் சதம் வீண்போனது- இங்கிலாந்தின் இரண்டாம் தர அணி பாகிஸ்தானை வெள்ளையடிப்பு செய்தது ..!
இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நிறைவுக்கு வந்துள்ளது .
முதல் 2 போட்டிகளிலும் அபார வெற்றியை பெற்று தொடரை 2-0 என வெற்றிகொண்ட இங்கிலாந்து மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் விளையாடியது .
முதல் 2 போட்டிகளிலும் மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணி ,இன்று அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது .
அணித்தலைவர் பாபர் அசாம் மற்றும் உதவி தலைவர் ரிஸ்வான் ஆகியோர் இறுதி நேரத்தில் அதிரடி நிகழ்த்த பாகிஸ்தான் பெறுமதியான 331 ஓட்டங்களைக் குவித்தது .
பாகிஸ்தான் அணியின் தலைவர் பாபர் அசாம் தன்னுடைய 14வது சதத்தை பூர்த்தி செய்தார் இவருடைய துடுப்பு மூலமாக 158 ஓட்டங்கள் பெறப்பட்டது, இதேபோன்று இமாம்-உல்-ஹக் மற்றும் ஆகியோர் ரிஸ்வான் ஆகியோரும் அரைச்சதம் அடித்தனர்.
332 இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் 155 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுக்களை இழந்து இருந்தாலும்கூட ,ஜேம்ஸ் வின்ஸ் மற்றும் கிரோகரி ஆகியோர் சத இணைப்பாட்டம் புரிந்து பாகிஸ்தானின் ஆறுதல் வெற்றியை தடுத்து நிறுத்தினர்.
மிகச்சிறப்பாக ஜேம்ஸ் வின்ஸ் தன்னுடைய முதல் சதத்தை பூர்த்தி செய்தார், அதேபோன்று சகலதுறை ஆட்டக்காரர் கிரோகரி அதிரடியாக விளையாடி மிகச்சிறப்பாக தன்னுடைய கன்னி அரைசதத்தை பூர்த்தி செய்தமை குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து அணி 7 விக்கட்களை இழந்து 332 ஓட்டங்களை கடந்து இங்கிலாந்து இலகுவான வெற்றியை பெற்றுக் கொண்டமை கவனிக்கத்தக்கது.
இதன் மூலமாக பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்தின் இரண்டாம் தர அணி பாகிஸ்தானுக்கு எதிராக 3-0 என வெற்றிக் கொண்டு அசத்தியிருக்கிறது.
ஏற்கனவே மோர்கன் தலைமையிலான வழமையான இங்கிலாந்து வீரர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டமை காரணமாக அவர்கள் இந்த தொடரில் பங்கேற்க முடியாதுபோக, ஸ்டோக்ஸ் தலைமையில் இங்கிலாந்து இரண்டாம்தர அணியை பாகிஸ்தானுக்கு எதிராக களமிறக்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.