இங்கிலாந்து பந்துவீச்சை திணறடித்த இந்தியர்கள், லோர்ட்ஸ் மைதானத்தில் அபார ஆரம்பம்…!

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி லோர்ட்ஸ் மைதானத்தில் இன்று ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணித்தலைவர் இந்தியாவை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தார்.

இந்தியாவின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் லோகேஷ் ராகுல் 6 வது சதம் அடித்து லோர்ட்ஸ் மைதானத்தில் சாதனை படைத்துள்ளார்.

இன்றைய போட்டியில் இந்தியாவின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக ஆடுகளம் புகுந்த ரோகித் சர்மா மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் சத இணைப்பாட்டம் புரிந்தனர்.

2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் வெளிநாட்டு மண்ணில் இந்திய ஆரம்பத்துடுப்பாட்ட ஜோடி சத இணைப்பாட்டம் புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரோகித் சர்மா 83 ஓட்டங்கள் , விராட் கோலி 42 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

புஜாரா மீண்டும் ஒரு தடவை ஏமாற்றி 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார், ஆயினும் இன்று தன்னுடைய 6வது சதம் அடித்து சாதனை படைத்த லோகேஷ் ராகுல் 127* ஓட்டங்களை பெற்று களத்தில் உள்ளார்.

இந்தியா முதல் நாள் நிறைவில் வெற்றிகரமாக 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 280 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இங்கிலாந்தில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டிகளில் இதுவரைக்கும் 47  தடவைகள் இங்கிலாந்து அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சந்தர்ப்பங்களில் எதிரணியை துடுப்பாட பணித்துள்ளது.

அப்படியான 47 சந்தர்ப்பங்களில் இன்று முதல் தடவையாக, எதிர் அணி முதல் இன்னிங்சில் வெறுமனே  2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 250 ஓட்டங்களைக் கடந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆக மொத்தத்தில் இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை இன்று இந்தியத் துடுப்பாட்ட வீரர்கள் மிகப்பெருமளவில் திணறடித்திருக்கிறார்கள் என்பது நிரூபணமாகிறது..

நாளை போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் தொடரவுள்ளது