AFC கிண்ண முன்னோடி தகுதிகாணில் களுத்துறை புளூ ஸ்டார் வெற்றி

கத்மண்டு தசரத் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (05) நடைபெற்ற ஆசிய கால்பந்தாட்ட கூட்டுசம்மேளன கிண்ண முன்னோடி தகுதிகாண் போட்டியில் நேபாளத்தின் ஏ பிரிவு சம்பியன் மச்ஹிந்த்ரா கழகத்தை 2 – 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலங்கையின் சுப்பர் லீக் சம்பியன் களுத்துறை புளூ ஸ்டார் வெற்றிகொண்டது.

 

இந்த வெற்றியுடன்  புளூ ஸ்டார்   அடுத்த சுற்றில் இந்தியாவின் மோஹன் பேகன் கழகத்தை கொல்கத்தாவில் ஏப்ரல் 12ஆம் திகதி  சந்திக்க தகுதிபெற்றது.

முன்கள வீரர்களான மொஹமத் இஷான், ஷெனால் சந்தேஷ் ஆகியோர் போட்ட கோல்களும் கோல் காப்பாளர் லக்ப்ரிய பெர்னாண்டோவின் அற்புதமான தடுப்புகளும் புளூ ஸ்டார் கழகத்தின் வெற்றியை உறுதிசெய்தன.

போட்டி ஆரம்பித்த 9ஆவது நிமிடத்தில் மச்ஹிந்தரா கழகத்துக்கு கிடைத்த கோல் போடும் மிகவும் இலகுவான   வாய்ப்பை அஸர்பைஜான் நாட்டு வீரர் நுர்லான் நவ்ருசோவ் தவறவிட்டார்.

15 நிமடங்கள் கழித்து புளூ ஸ்டாருக்கு கிடைத்த பெனல்டியை ஆபிரிக்கரான அரெபாட் ஒம்பேபே எடுத்தபோது மச்ஹிந்த்ரா கோல்காப்பாளர் பிஷால் ஷ்ரேஸ்தா மிகவும் சாமர்த்தியமாக தடுத்து நிறுத்தினார்.

எனினும் அடுத்த நிமிடமே புளூ ஸ்டார் கோல் ஒன்றைப் போட்டு முன்னிலை அடைந்தது. மத்திய கள வீரர் மொஹமத் பஸால் பரிமாறிய பந்தைப் பெற்றுக்கொண்ட மொஹமத் இஷான் மிகத் திறமையாக பந்தை நகர்த்தி கோல் போட்டார்.

சுப்பர் லீக் தங்கப் பாதணி வீரர் ஷெனால் சந்தேஷ் 28ஆவது நிமிடத்தில் கோல் போட்டு புளூ ஸ்டார் கழகத்தை 2 – 0 என முன்னிலையில் இட்டார்.

இடைவேளையின் பின்னர் மச்ஹிந்த்ரா கழக வீரர்கள் கோல் போடுவதற்கு எடுத்த பல முயற்சிகளை கோல்காப்பாளர் லக்ப்ரிய பெர்னாண்டோவும் அணித் தலைவர் தரிந்து எரங்க உட்பட பின்கள வீரர்களும் தடுத்து தமது அணியின் வெற்றியை உறுதிசெய்தனர்.

 

எவ்வாறாயினும் போட்டியின் உபாதையீடு நேரத்தில் (90 + 4 நி.) மாற்று வீரர் மனிஷ் டெங்கி பரிமாறிய பந்தை சுஜால் ஷ்ரெஸ்தா கொலாக்கி மச்ஹிந்தர அணிக்கு ஆறுதல் அளித்தார்.

வெற்றிபெற்ற புளூ ஸ்டார் அணியில் தரிந்து   எரங்க (அணித் தலைவர்), லக்ப்ரிய பெர்னாண்டோ, ஐசாக் அட்டேவ், ரீ. கஜகோபன், சலன சமீர, ப்றின்ஸ் போடு, அரெபாட் ஒம்பேபே, ஷெனால் சந்தேஷ், மொஹமத் பஸால், மொஹமத் இஷான், மொஹமத் அர்ஷாத் ஆகியோர் முதல் பதினொருவராக இடம்பெற்றனர்.

மாற்றுவீரர்களாக மொஹமத் பாஹிர், சலன ப்ரமன்த, டெனியல் மெக்ரா, லஹிரு தாரக்க சில்வா ஆகியோர் பயன்படுத்தப்பட்டனர்.

புளூ ஸ்டார் குழாத்தில் மொஹமத் சஹ்லான், மொஹமத் முர்சித், மொஹமத் முன்பிக், மொஹமத் ரிப்கான், சரந்து சம்ப்பத், மொஹமத் ரிசான் ஆகியோரும் இடம்பெறுகின்றனர்.

via -MetroNews

Previous articleவிமர்சனத்தை தோற்றுவித்த பாண்டியாவின் நடவடிக்கை (வீடியோ இணைப்பு)
Next articleIPL போட்டிகளை ஒதுக்கிவிட்டு இலங்கை வீர்ர்கள் உடனடியாக நாட்டுக்கு திரும்ப வேண்டும் – ரணதுங்க கோரிக்கை…!