CSK அணியின் அதிக மதிப்புமிக்க பிளேயர்- ஆகாஷ் சோப்ரா அதிரடி கணிப்பு
ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி துவங்க உள்ளது. இம்முறை தமிழகத்தின் தலைநகர் சென்னையில் துவங்கும் இத்தொடரின் முதல் போட்டியில் நடைபெற்ற எம்எஸ் தோனி தலைமையின் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஃப் டு பிளேஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன.
இந்த சீசனில் கோப்பையை வெல்வதற்காக தயாராகியுள்ள 10 அணிகளுக்கு மத்தியில் தோனி தலைமையில் சென்னை 6வது கோப்பையை வென்று மீண்டும் சாம்பியன் பட்டத்தை தக்க வைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது.
மேலும் இம்முறை ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கைக்வாட் ஆகியோர் உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தி கோப்பையை தக்க வைப்பதற்கு உதவுவார்கள் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.
விலைமதிப்பு மிக்க வீரர்:
இருப்பினும் கடந்த வருடம் 672 ரன்கள் அடித்து வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்ட துவக்க வீரர் டேவோன் கான்வே இம்முறை காயத்தால் விலக உள்ளார் என்பது சென்னைக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
அது போன்ற சூழ்நிலையில் 1.80 கோடிக்கு புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள மற்றொரு நியூசிலாந்து இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா அவருடைய இடத்தில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்குவார் என்று நம்பப்படுகிறது.
இந்நிலையில் ரச்சின் ரவீந்தரா டி20 கிரிக்கெட்டில் இதற்கு முன் சுமாராக செயல்பட்டாலும் தோனி தலைமையில் சிறப்பாக விளையாடி சிஎஸ்கே அணியின் விலை மதிப்புமிக்க வீரராக திகழ்வார் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார்.
இது பற்றி தன்னுடைய யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.
“எப்போதும் ஏதேனும் ஒரு புதிய வீரர்களை கண்டுபிடிப்பார்கள் என்பதால் இப்போதும் சென்னை அணி நன்றாக இருப்பதாகவே நான் கருதுகிறேன்”
“அந்த வகையில் தற்போது அவர்களிடம் கான்வேவுக்கு பதிலாக ஏற்கனவே ரச்சின் ரவீந்திரா எனும் ஃபார்மில் உள்ள நல்ல வீரர் இருக்கிறார். கடந்த உலகக் கோப்பையில் அபாரமாக விளையாடிய அவர் சமீபத்திய டெஸ்ட் போட்டிகளிலும் நன்றாக செயல்பட்டு தன்னுடைய வாழ்வின் உச்சகட்ட ஃபார்மில் இருக்கிறார்.
அதே சமயம் டி20 கிரிக்கெட்டில் அவருடைய புள்ளி விவரங்கள் நன்றாக இல்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்”
“இருப்பினும் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவது நல்ல விஷயமாகும். அதனால் டி20 கிரிக்கெட்டிலும் ரச்சின் ரவீந்திராவை புதிய அவதாரில் பார்க்கலாம். குறிப்பாக இடது கை ஓப்பனிங் பேட்ஸ்மேன் மற்றும் இடது கை ஸ்பின்னராக இருக்கும் அவர் அதிக மதிப்புமிக்க வீரராக வருவதற்கான அனைத்து திறமைகளையும் கொண்டுள்ளார்” என்று கூறினார்.
அவர் கூறுவது போல இதற்கு முன் தடுமாறினாலும் தோனி என மகத்தான கேப்டன் தலைமையில் ரச்சின் ரவீந்திராவும் அசத்துவார் என்று உறுதியாக நம்பலாம்.