சிஎஸ்கே அணிக்கான ஒரு டெம்ப்ளேட் இருக்கிறது. அந்த டெம்ப்ளேட்டை வைத்து ஐந்து கோப்பைகளை வென்று இருக்கிறது.
இன்று வரையில் அதிக கோப்பைகள், அதிக ப்ளே ஆப், அதிக பைனல் என ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணிகளின் வரிசையில் முதல் இடத்தில் இருக்கிறது. மேலும் இதே காரணத்திற்காக ஐபிஎல் தொடரில் மிக வெற்றிகரமான கேப்டனாக தோனி இருக்கிறார்.
எல்லா வகையான வெற்றிகரமான டெம்ப்ளேட்க்கும் ஒரு நாள் தோல்வி, சரிவு என்பது வரும். அங்கிருந்து குறிப்பிட்டவர்கள் சுதாரித்து என்ன செய்தார்கள் மீண்டார்களா? இல்லையா? என்பது பாடமாக அமையும்.
இப்படி இருக்கும் பொழுது, ஒரு மிக வெற்றிகரமான அணியின் ஒரு சீசன் தோல்விக்காக நான் அவர்களை விமர்சித்தது கிடையாது. மிக அனுபவம் வாய்ந்த, அறிவான அணி நிர்வாகம் ஏலத்தில் செயல்பட்ட விதமும், களத்தில் செயல்பட்ட விதமும் ஆதங்கத்தை உருவாக்கியது. அடுத்து அவர்கள் அஸ்வினை வாங்கியது பல வகைகளில் அந்த அணியை கடுமையாகப் பாதித்தது. ஏனென்றால் அஸ்வினை வாங்கும் முடிவு வெற்றியைத் தாண்டி வேறு சில விஷயங்களை உள்ளடக்கியது என்பதால் கோபம் வந்தது.
மற்றபடி, சிஎஸ்கே, தோனி எல்லாம் ஒரு ஆளா? என்கின்ற ஹேட்டர்களின் வறட்டுத்தனமான பேச்சு என்னுடையது கிடையாது.
மேலும் ஒரு சுவாரசிய விஷயம் என்னவென்றால், சிஎஸ்கே அணியின் வெற்றிகரமான டெம்ப்ளேட் இன்னுமே தோல்வி அடையவில்லை என்பதுதான். தற்போது வந்திருக்கும் தோல்வி சிஎஸ்கே அணி நிர்வாகத்தின் அதீத நம்பிக்கையால், தவறான முடிவால் ஏற்பட்டது. மாறாக அவர்களுடைய வழக்கமான டெம்ப்ளேட்டால் ஏற்பட்டது கிடையாது. ஏனென்றால் இதற்கு முன் அவர்கள் வாங்கிய அனுபவ வீரர்களுக்கும், தற்போது அவர்கள் அனுபவம் என்ற பெயரில் வாங்கி இருக்கும் வீரர்களுக்குமான திறமைரீதியான வித்தியாசம் மிகப்பெரியது. எனவே சிஎஸ்கே அணி நிர்வாகம் அவர்களுடைய வழக்கமான டெம்ப்ளேட்டில் இந்த முறை செயல்படவில்லை என்பதுதான் உண்மை.
அடுத்து தோனியின் ரசிகர்களுக்கு ஒரு விஷயம், தோனி விளையாடுவது உங்கள் அணியை எந்த வகையிலும் பாதிக்கவில்லை என்றால் அது உங்களுடைய அறியாமை. இதுவே மெகா ஏலத்திற்கு முன்பாக தோனி விளையாட மாட்டார் என்று இருந்திருந்தால், கேஎல்.ராகுல், ஜோஸ் பட்லர், பில் சால்ட், இஷான் கிஷான், ரிஷப் பண்ட் என ஏலத்தில் சிஎஸ்கே சென்றிருக்க அதிக வாய்ப்புகள் உண்டு.
இப்படியான வீரர்களை வாங்க வேண்டும் என்றால் கொஞ்சம் பணம் கையிருப்பு அதிகமாக இருக்க வேண்டும். இதற்கு வீரர்களை தக்க வைத்த பொழுதும் சிஎஸ்கே வேறு விதமாக யோசித்திருக்கும். இது மட்டும் இல்லாமல் ஒரு வீரரால் முழுவதுமாக 40 ஓவர் பங்களிப்பு செய்ய முடியாது என்றால் விளையாடாமல் இருப்பது நல்லது. அது அணியின் மற்றும் தொடரின் போட்டித் தன்மையை குறைக்காமல் இருக்கும்.
இல்லை தொடர்ந்து தோனியை வைத்து விளையாடுவோம் என்றால், நீங்கள் டாப் 7க்கு தரமான வீரர்களை நிரப்பி விட்டு, எட்டாவது இடத்தில் வைத்துக் கொள்ளலாம். அதற்குப் பிறகு வரும் விளைவுகள் உங்கள் சார்ந்தது!