ஹோல்டர் பந்துவீச்சில் மண்ணைக் கவ்வியது இங்கிலாந்து
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி பார்போடாஸில் இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் டாம் பாண்டன், ஜேசன் ராய், ஜேம்ஸ் வின்ஸ், மொயீன் அலி, ஈயான் மோர்கன், சாம் பில்லிங்ஸ் என நட்சத்திர வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் கிறிஸ் ஜோர்டன், ஆதில் ரஷித் ஆகியோர் ஒருசில பவுண்டரிகளை விளாசி அணிக்கு உதவினர். இருப்பினும் இங்கிலாந்து அணி 19.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன்களை மட்டுமே எடுத்தது.
இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜேசன் ஹோல்டர் 3.4 ஓவர்களை வீசி ஒரு மெய்டன் மற்றும் 7 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இதையடுத்து எளிய இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிராண்டன் கிங் – ஷாய் ஹோப் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இதில் ஹோப் 20 ரன்களுடன் வெளியேற, மறுமுனையிலிருந்த பிராண்டன் கிங் அரைசதமடித்து அணியின் வெற்றிக்கு உதவினார்.
இதன்மூலம் 17.1 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி இலக்கை எட்டியதுடன், 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பிராண்டன் கிங் 52 ரன்களைச் சேர்த்தார். மேலும் ஜேசன் ஹோல்டர் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
#Abdh