யூரோ கிண்ணத்தை தனதாக்கி வரலாறு படைத்தது இத்தாலி அணி..!
கால்பந்து ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்து காத்திருந்த மிக முக்கியமான தொடர்களில் ஒன்றான யூரோ கிண்ண கால்பந்தாட்ட தொடர் நிறைவுக்கு வந்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளுக்கு இடையில் இடம்பெற்ற இந்த போட்டி தொடர் கடந்த மாதம் 11ஆம் திகதி ஆரம்பமாகியது. சரியாக ஒரு மாதம் நடைபெற்ற இந்த போட்டி தொடரில் ஐரோப்பாவின் பிரபலமான 24 அணிகள் விளையாடி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த 24 அணிகளிலிருந்து இங்கிலாந்து மற்றும் இத்தாலி அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.
இங்கிலாந்தின் வெம்லி மைதானத்தில் ஏராளமான பார்வையாளர்கள் மத்தியில் இடம்பெற்ற இந்த போட்டியில் வரலாறு படைத்திருக்கிறது இத்தாலி கால்பந்து அணி.
போட்டி ஆரம்பமாகி 2 வது நிமிடத்திலேயே லூக் ஷா அற்புதமான கோலைப் பெற முதல் பாதி ஆட்டம் 1-0 எனும் அடிப்படையில் இங்கிலாந்து வசம் ஆனது, இரண்டாவது பாதி ஆட்டத்தில் கோல் பெறுவதற்கான கடுமையான முயற்சிகளை இத்தாலி முன்னெடுத்தது.
3 மஞ்சள் அட்டைகளை வாங்கி கொண்டாலும்கூட அவர்கள் ஆக்ரோஷம் நிறைந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள், இதன் காரணமாக 67 ஆவது நிமிடத்தில் Bonnucci அற்புதமான ஒரு கோலை பெற்றுக்கொண்டுக்க இத்தாலி போட்டியை 1-1 என்று கொண்டு சென்றது
போட்டிக்காக நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்களை மட்டுமே பெற்றுக் கொண்ட நிலையில் வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக மேலதிகமாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டது.
மேலதிகமாக வழங்கப்பட்ட 30 நிமிடங்களிலும் இரண்டு அணிகளும் கோல்களைப் பெற்றுக் கொள்வதற்கு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டாலும் மேலதிகமாக இரு அணிகளும் கோள்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை உருவானது.
இதனடிப்படையில் 2020 ஆம் ஆண்டுக்கான யூரோ வெற்றியாளர் பெனால்டி ஷூட் அவுட் அடிப்படையில் தேர்வு செய்யும் நிலமை உருவானது.
இறுதியில் பெனால்டி ஷூட் அவுட் அடிப்படையில்் இத்தாலி அணி 3-2 என யூரோ கிண்ணம் வென்று வரலாறு படைத்தது.
இங்கிலாந்து அணி 55 ஆண்டுகளுக்குப் பின்னர் கால்பந்து உலகின் மிகப்பெரிய தொடர்களில் ஒன்றின் இறுதிப்போட்டிக்கு தேர்வாகி இருந்தாலும், சொந்த நாட்டு ரசிகர்களுக்கு மத்தியில் தோல்வியை தழுவி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து கால்பந்து அணியின் கோல் காப்பாளர் பிக்போஃர்ட் அருமையாக இன்று இறுதிப்போட்டியில் விளையாடி இருந்தாலும், இங்கிலாந்துக்கு கிண்ணத்தை பெற்றுக்கொடுக்க முடியாதுபோனமை ஏமாற்றமே.
பெனால்டி ஷூட் அவுட்டில் இரண்டு வாய்ப்புகளை அபாரமாக தடுத்து இருந்தாலும், இங்கிலாந்து வீரர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பெனால்டி ஷூட் (ரஷ்போர்ட், சன்சோ , சகா ஆகிய வீரர்கள்) சரியாக இலக்கு நோக்கி செலுத்த தவறியமை இன்றைய தோல்வியின் காரணமாக அமைந்திருக்கிறது.
கால்பந்து உலகின் மிகப்பெரிய இரண்டு தொடர்களாக கால்பந்து உலககிண்ணம் மற்றும் யூரோ கிண்ணம் ஆகியன கருதப்படுகின்றன.
இறுதியாக 2018 நடந்த கால்பந்து உலகக் கிண்ண தொடருக்கே தகுதிபெறாது வெளியேற்றப்பட்ட இத்தாலி அடுத்து வந்து கால்பந்து உலகின் மிக முக்கியமான தொடர்களில் ஒன்றான யூரோ கிண்ணத்தில் வெற்றி பெற்று அசத்தி இருக்கின்றமை கால்பந்து ரசிகர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விடயமாக இருக்கிறது.