ICC Worldcup- ஆரம்பம் முதலே சொதப்ப ஆரம்பித்திருக்கும் ஆஸி….!

உலக கோப்பை என்றாலே அது ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் இல்லாமல் இருக்காது. அந்த அணி உலக கோப்பை முழுவதும் ஒரு போட்டியில் தோற்றாலே அதிசயம் என்கிற வகையில் தான் கம்பீரமான ஆட்டத்தை வெளிப்படுத்தும்.

கடந்த தசாப்தங்களில் ஆஸ்திரேலிய அணியின் ஆட்டமும், அணுகுமுறையும் ஆக்ரோஷத்தின் உட்சமாக இருக்கும். இதனால் தான் அந்த அணி 5 முறை சாம்பியன் பட்டம் வென்று கிரிக்கெட்டில் கோலோச்சியது.

ஆனால், அதில் பாதியளவு அணுகுமுறை கூட இப்போது இருக்கும் ஆஸ்திரேலிய அணியில் பார்க்க முடியவில்லை.

2 போட்டிகளில் தோல்வி

உலக கோப்பை வரலாற்றில் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோற்றதே இல்லை. ஆனால் அந்த வரலாறு இம்முறை மாற்றி எழுதப்பட்டுவிட்டது. அடுத்தடுத்து நடப்பு உலக கோப்பை தொடரில் இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்திருக்கும் ஆஸ்திரேலிய அணி, அரையிறுதிக்கு தகுதி பெறுமா? எனும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது.

ஏனென்றால் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக அந்த அணி பெற்ற தோல்வி என்பது, சவால் கொடுத்தோ அல்லது போராடி தோற்றதோ அல்ல.

கத்துக்குட்டி அணிகள் எப்படி தோல்வியை ஒப்புக் கொண்டு ஆடுமோ அப்படியொரு மோசமான ஆட்டத்தை இரு அணிகளுக்கு எதிராகவும் வெளிப்படுத்தியிருக்கிறது ஆஸ்திரேலிய அணி.

பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என மூன்றிலும் படுமோசமாக இருக்கிறது ஆஸ்திரேலியா. இந்திய அணிக்கு எதிராக விராட் கோலியின் கேட்சை விட்டது எப்படி போட்டியின் முடிவை மாற்றியதோ, அதேபோல் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 4 கேட்சுகளை அடுத்தடுத்து விட்டனர் ஆஸ்திரேலிய அணி வீரர்கள்.

இது தான் அந்த அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அடிகோடிட்டு காட்டப்படுகிறது. அந்தளவுக்கு மோசமாக பீல்டிங் இருக்கிறது. பந்துவீச்சில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு கேப்டன் பாட் கம்மின்ஸ் உள்ளிட்ட யாரும் இதுவரை வீசவில்லை. ஹேசில்வுட் பவுலிங் கூட சுமார் ரகமாக தான் இருக்கிறது.

பேட்டிங்கை எடுத்துக் கொண்டால் வார்னர், மார்ஷ், மேக்ஸ்வெல், ஸ்மித் என டாப் ஆர்டரில் ஆடுபவர்கள் பயிற்சி ஆட்டத்தில் ஆடுவதுபோல் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடத்தில் எந்தவொரு சீரியஸ்னஸூம் தெரியவில்லை. குறிப்பாக மேக்ஸ்வெல் அணியின் சூழலை கொஞ்சமும் புரிந்து கொள்ளாமல் பேட்டிங் ஆடிக் கொண்டிருக்கிறார்.

இதைவிட இந்திய பிட்சுகளுக்கு எடுபடும் இடது கை சுழற்பந்துவீச்சாளர்கள் யாரும் ஆஸ்திரேலிய அணியில் இல்லை. நாதன் லையன் என்ற அனுபவமிக்க வீரர் இருந்தாலும் அவருக்கு பிளேயிங் லெவனில் இடம் கொடுக்கவில்லை.

உலக கோப்பை அரையிறுதி வாய்ப்பு ?

ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது கடமைக்கு உலக கோப்பை தொடரை எதிர்கொண்ட அணிபோல் ஆஸ்திரேலிய அணி விளையாடிக் கொண்டிருக்கிறது. இதனையெல்லாம் மாற்றினால் மட்டுமே இனி வரும் போட்டிகளில் எதிரணிகளுக்கு சவால் கொடுத்து போட்டியில் வெல்வது குறித்து யோசிக்க முடியும்.

அப்படி விளையாடினால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பில் இனி நீடிக்க முடியும். ஒரு போட்டியில் தோற்றால் கூட ஆஸ்ரேலிய அணி உலக கோப்பை 2023 தொடரில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுவிடும். இல்லையென்றால் மற்ற அணிகளின் முடிவு ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக அமைய வேண்டியிருக்கும்.

✍️ Thillaiyampalam Tharaneetharan