INDIA-வால் இதைவிட மோசமாக பேட்டிங் செய்ய முடியாது.. திலக் வர்மா காப்பாற்றினார்.. இங்கி. வீரர் கருத்து
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 78 ரன்கள் சேர்ப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த சூழலில் திலக் வர்மா மட்டும் அபாரமாக விளையாடி இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.
திலக் வர்மாவை தவிர மற்ற வீரர்கள் யாரும் பேட்டியில் சோபிக்கவில்லை. இந்த நிலையில் இந்திய அணியால் இதைவிட மோசமாக பேட்டிங் செய்ய முடியாது என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து பேசிய அவர்,”திலக் வர்மா ஒரு மிகச் சிறந்த வீரர். நெருக்கடியான சூழ்நிலையில் பேட்டிங்கில் அபாரமாக விளையாடி இருக்கிறார். சரியான பந்தை தேர்ந்தெடுத்து அவர் ரன்களை சேர்த்திருக்கிறார். மற்ற இந்திய அணி வீரர்கள் மோசமான ஷார்ட்களை ஆடி ஆட்டம் இழந்த நிலையில், அவர் மட்டும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தார்”.
“இந்த போட்டியில் இந்திய அணியால் இதைவிட மிக மோசமான ஒரு பேட்டிங்கை செய்ய முடியாது என்று நான் நினைக்கின்றேன். திலக் வர்மா என்ற ஒரே ஒரு பேட்ஸ்மேனால் இந்திய அணி காப்பாற்றப்பட்டு இருக்கிறது. இங்கிலாந்து அணியை பொறுத்த வரை அவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு ஒன்று உருவாகி இருந்தது”.
“முதல் போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடியது போல் இரண்டாவது போட்டியில் அவர்களால் விளையாட முடியவில்லை. இங்கிலாந்து வீரர்களுக்கு ஒன்று, இரண்டு வாய்ப்புகளை இந்திய வீரர்கள் கொடுத்தார்கள். அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் இங்கிலாந்து அணி விட்டுவிட்டது” என்று மைக்கேல் வாகன் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாகிர் கான், “தென்னாப்பிரிக்காவில் திலக் வர்மா விளையாடும் போது சதம் அடித்தார். பவர் பிளேவில் கூட இன்று இந்திய அணி நன்றாகத்தான் விளையாடியது. 59 ரன்களை சேர்த்தது, ஆனால் மூன்று விக்கெட்டுகளை இழந்தது. எனவே இந்த சூழ்நிலையை சரியாக புரிந்து கொண்டு திலக் வர்மா அபாரமாக விளையாடினார். தேவைக்கு ஏற்ப அவர் ரன் குவிக்கும் வேகத்தை அதிகப்படுத்தினார். முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை அவர் வெற்றி பெற வைத்திருக்கிறார்” என ஜாகிர் கான் கூறியுள்ளார்.