இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றிருப்பதோடு, எதிர்பார்ப்புக்களையும் தோற்றுவித்துள்ளது எனலாம்.
கோஹ்லி இருந்தே 36 ஓட்டங்களுக்குள் சுருண்ட இந்தியா, கோஹ்லி இல்லாமலேயே அவுஸ்திரேலியாவை அவுஸ்திரேலியாவில் வைத்து சாட்டையடி கொடுத்து மெல்போர்ன் டெஸ்ட் போட்டியை வென்று காட்டியது.
என்னைப் பொறுத்தவரை இந்தியாவுக்கு இந்த ஒற்றை வெற்றியே இப்போதைக்கு போதுமானது .
ஆனால் போர்டர் -காவஸ்கர் கிண்ணத்தை இந்தியா தன் பக்கத்திலேயே வைத்திருக்க வேண்டுமானால் இந்தியா மீதமிருக்கும் 2 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றை வென்றால் போதுமானது. அப்படி இந்தியா கிண்ணத்தை வைத்திருக்க ஆசை கொண்டால் அந்த அதிசயம் வேண்டுமானால் சிட்னியில் மட்டுமே நடக்க முடியும் என்பது என் எண்ணம்.
எகிறிக் குதிக்கும் பந்துகளால் தாக்குதல் யுத்தம் சரமாரியாக நடக்கும் Gabba -பிரிஸ்பேன் மைதானத்தில் அது சாத்தியமேயில்லை. ஆனால் சிட்னியில் சிலவற்றை சாதிப்பதற்கு இந்தியாவுக்கு சந்தர்ப்பம் அதிகம் இருக்கின்றது.
முதலில் போட்டியின் நாணய சுழற்சியை வெற்றி கொள்ள வேண்டும், முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை தனதாக்க வேண்டும்.
சிட்னியும் -இந்தியாவும்.
இதுவரை சிட்னி மைதானத்தில் இந்தியா 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கின்றது. ஒரேயொரு வெற்றியும் 5 தோல்விகளையும் சந்தித்துள்ளது,
ஆனால் இந்தியா விளையாடியுள்ள போட்டிகளில் 6 ஐ இங்கே வெற்றி தோல்வியற்று நிறைவுக்கு கொண்டு வந்துள்ளது.
(அரைவாசி அளவிலான போட்டிகளில் இந்தியா இங்கே தோற்கவில்லை)
இறுதியாக கோஹ்லி தலைமையில் தொடரை வென்றபோது (2018 இல்) இந்த மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் இந்தியா முதலில் துடுப்பாடி 622/7 என்று ஆட்டத்தை இடை நிறுத்தியது.
புஜாரா 193 , பான்ட் ஆட்டமிழக்காது 159 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர், ஆனால் பதிலுக்கு ஆடிய அவுஸ்திரேலியா 300 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து Follow on முறைமூலம் துடுப்பாடுகையில் மழை காரணமாக ஆட்டம் இடைநிறுத்தப்பட போட்டி வெற்றி தோல்வியற்று நிறைவுக்கு கொண்டு வந்தது
.இறுதி நாளில் வெறுமனே 6 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் மழை குறுக்கிட்டு போட்டி தடைப்பட்டது.
இதேபோன்று இதற்கு முதல் 2015 இல் இந்திய அணி சிட்னியில் விளையாடிய போட்டியும் வெற்றி தோல்வியற்று நிறைவுக்கு கொண்டு வந்தது. அந்த போட்டியில் இரு அணிகளும் மொத்தமாக 1550 ஓட்டங்கள் குவித்திருந்தன என்றால் இந்த மைதானம் எப்படி துடுப்பாட்ட வீரர்களுக்கு துணை புரியும் என்பதை நான் சொல்ல தேவையில்லை.
இந்த மைதானத்தில் இறுதி 10 ஆண்டுகளில் இடம்பெற்ற 10 டெஸ்ட் போட்டிகளில் 3 போட்டிகள் வெற்றி தோல்வியற்று நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது, இரண்டாவதாக துடுப்பாடிய அணி ஒரேயொரு போட்டியிலேயே வெற்றி பெற்றுள்ளது.
3 போட்டிகள் இன்னிங்ஸ் வெற்றிகளும், 3 போட்டிகள் 200 க்கு மேற்பட்ட ஓட்டங்கள் வித்தியாசத்திலான வெற்றிகளையும் பெற்றுகொண்டன.
மொத்தமாக இடம்பெற்ற 108 டெஸ்ட் போட்டிகளில் முதலில் ஆடிய அணிகள் 47 போட்டிகளிலும், இரண்டாவதாக ஆடிய அணிகள் 41 போட்டிகளையும் வென்றுள்ளன.
சராசரி முதல் இன்னிங்ஸ் ஓட்ட எண்ணிக்கை 317 ஆகும்.
அதிகமான ஓட்டங்கள் எனும் சாதனையை இந்தியாவே படைத்துள்ளது 2003 -04 ஆண்டு காலப்பகுதியில் கங்குலி தலைமையில் இந்த சாதனையை இந்தியா படைத்தது.
சச்சின் 241 , லக்ஷ்மன் 178 ஓட்டங்கள்.
ஒரு கவர் ட்ரைவ் கூட அடிக்காமல் அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர்களை வெறுப்பின் உச்சத்துக்கே கொண்டு போனார் சச்சின் 241 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட போட்டியில் .
இந்த மைதானம் 4 வது டெஸ்ட் இடம்பெறவுள்ள Gabba மைதானம் போன்று பௌன்ஸ ஆகும் மைதானமாக அல்லாம் சுழல் பந்தின் சொரக்காபுரியாகவும், ஓட்டங்கள் குவிக்க இந்தியாவில் உள்ள சில மைதானங்கள் போன்றும் கருதலாம்.
வோர்னர் 8 போட்டிகளில் 4 சதமும், ஸ்மித் 7 போட்டிகளில் 2 சதம் 5 அரைசதம் பெற்றுள்ளனர். அவர்கள் இருவருக்கும் நல்ல ராசியான மைதானமே.
இந்திய அணி தேர்வு.
என்னை பொறுத்த வரையில் சரியான பிளேயிங் XI ஐத் தேர்வு செய்வதில் ரஹானே பக்கா திறமைசாலி. நாளை விளையாடப் போகும் அணியில் எதுவித சந்தேகமுமில்லாத தரமான அணி.
நடராஜன் தேர்வு செய்யப்படாமை கொஞ்சம் கவலையாயினும், சைனி 145 + KM வேகத்தில் பந்துகளை வீச வல்லவர். இவரது எக்ஸ்ட்ரா Pace அணிக்கு கொஞ்சம் வலுச்சேர்க்கும் என்று நம்பலாம்.
கொஞ்சம் வேரியேசன் தேவை என்பதற்காக இடது கை பந்தாளரான நட்டு அணிக்குள் வருவது சிறந்தது ஆயினும், ஓரளவுக்கு அனுபவம் கொண்ட பூம்ரா மட்டுமே அணிக்குள் இருக்கும் பிரதான அனுபவ வேகப்பந்து வீச்சாளர் (16 டெஸ்ட்)
எனும் நிலையில், முதல்தர போட்டிகளிலும் அனுபவம் குறைவான நடராஜனை விடவும் சைனி யின் தேர்வு நியாயமானது என்பதோடு பூம்ராவின் அழுத்தத்தையும் குறைக்கவல்லது.
பிரிஸ்பேனில் அடுத்த போட்டி நடக்கிறதோ இல்லையோ அப்பிடி நடந்தால் சிட்னி மைதானம் சைனிக்கு கைகொடுக்காவிட்டாலும் அங்கே இவரது மாயஜாலங்கள் அரங்கேறும் என்று நம்பலாம்.
ரோஹித் வரவு.
வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் சொதப்பும் ரோஹித் சர்மாவுக்கு இது மிகப்பெரிய போராட்ட களம்தான்.ஆனால் Hook ,Pull Shot விளையாடுவதில் வல்லவராகவும் அவுஸ்திரேலியா என்றால் அவருக்கு அத்துப்படியும் என்பதால் நாளை மிரட்டலாம்.
டிராவிட் தொடர்பில் ஸ்டீவ் வோ தன் அணியினருக்கு சொன்னதையே நானும் சொல்கிறேன், இந்தியா முதலில் துடுப்பாடினால் முதல் மணி நேரத்துக்குள் புதிய பந்தில் ரோஹித்தை கழற்ற வேண்டும், இல்லையேல் டெஸ்ட்டிலும் ரோஹித் மிரள வைப்பார்.
ஆரம்ப வீரராக 5 போட்டிகள்- 92.66 சராசரியில்- 556 ஓட்டங்கள்
கிட்டத்தட்ட இந்தியாவில் காணப்படும் தன்மைகளையே சிட்னி மைதானம் கொடுப்பதால் அவருக்கு கடினமிருக்காது, (நாளை தயாராகி இருக்கும் மைதானம் கொஞ்சம் பச்சைப் புற்கள் கொண்டு இருப்பதால் வேகப்பந்து வீச்சுக்கும் அதீத அளவான சாதகம் கொடுக்கலாம்)
அகர்வால் பாவம்தான்.
ஒரு தரமான ஆட்டக்காரர், கடந்த 4 இன்னிங்ஸ்களில் 31 ஓட்டங்கள் என்று சொதப்பினார் என்பதற்காக வெளியில் போடுவது வேதனைதான், நீண்டகாலமாக இந்திய தேர்வாளர்கள் கதவை தட்டிக் கொண்டே இருந்தவர்.
இவரது துடுப்பாட்ட நிலை (கால்களுக்கிடையில் இடைவெளி கொன்சம் அதிகரித்து விட்டது) அவரது ஓட்டக்குவிப்பை மட்டுப்படுத்துகின்றது. Backfoot அசைவை இது கொஞ்சம் மட்டுப்படுத்துகிறது.
Stance & High backlift இரண்டையும் கொஞ்சம் கவனிக்க வேண்டும் எனும் கதைகள் அதிகம் உருவாக ஆரம்பித்துவிட்டன, ஆகவே இது அவருக்கு ஒரு சிறிய பிரேக் மட்டுமே. தொடர் ஆரம்பிக்க முன்னர் மாயங்கோடு யார் ஆரம்ப வீரர் என்று இருந்தது இப்போது அவரே அணியில் இல்லை என்றாகிவிட்டது.
சொந்த மண்ணிலேயே சதமடிக்க திணறும் ஆஸி.
இந்தியாவுக்கு எதிராக இறுதி 12 டெஸ்ட் போட்டிகளில் எதிரணிகள் வெறுமனே 2 சதம் மட்டுமே அடித்திருக்கின்றன. அதிலும் அவுஸ்திரேலியா அவர்களது மண்ணிலேயே இறுதி 6 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக சதம் எதனையும் அடிக்கவில்லை.
ஆனால் நாளை ஸ்மித், வோர்னர்,லாபிசேன் ஆகியோர் வித்தையை காட்டலாம்.
இலங்கைக்கு முதலிடம்
இந்தியாவுக்கு இறுதி இடம்
ஒவ்வொரு அணியும் இறுதியாக விளையாடிய 12 டெஸ்ட் போட்டிகளில் எதிரணிகளுக்கு விட்டுக்கொடுத்த சதங்களின் எண்ணிக்கை.
அதிகமானவற்றை இலங்கையும், குறைவானவற்றை இந்தியாவும் வீட்டுக் கொடுத்துள்ளன.
SL – 15
PAK – 14
BAN – 14
SA – 11
NZ – 9
WI – 8
AUS – 7
ENG – 7
IND – 2
அஷ்வின்- வோர்னர்
அலிஸ்டயார் குக்குக்கு எப்படி அஸ்வின் வில்லனோ அதே போன்று டேவிட் வோர்னருக்கும் அஷ்வின் வில்லன், இதுவரை 12 தடவைகள் ஆட்டமிழக்க செய்திருக்கிறார்.
அவுஸ்திரேலியா முதலில் ஆடினாலும் ரஹானே அஷ்வினை விரைவாக தாக்குதல் நடத்த கொண்டுவருவார்.
Catches Win Matches
இந்தியா அடிலையிட்டிலும், அவுஸ்திரேலியா மெல்போர்னில் வாங்கிக்கட்ட அவர்கள் தவறவிட்ட பிடிகளே பிரதான காரணமாகும். அதனை இரு அணிகளும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இரு அணிகளும் ஆரம்ப துடுப்பாட்டம் கடந்த இரு போட்டிகளிலும் நம்பிக்கை கொடுக்கவில்லையாயினும் நாளைய போட்டியில் இரு அணிகளின் ஆரம்ப ஜோடிகளும் தரமான வீரர்களாக இருப்பதனால் ஆரம்ப விக்கெட்டை வீழ்த்தவே கடுமையான போட்டி நிலவும் என்று நம்பலாம்.
1978 ஆண்டுக்கு பின்னர் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா சிட்னியில் டெஸ்ட் எதனையும் வெல்லவில்லையாயினும் நாளைய போட்டி கடுமையான போட்டியாக இருக்கத்தான் போகிறது.
ஓட்டங்களைக் குவிக்க திணறும் சகலரும் இந்த போட்டியோடு பாக் டூ போர்ம் என்று வந்துவிட வாய்ப்பிருக்கிறது.
மீண்டும் ஒரு தடவை 5 மணிக்கே எலார்ம் வைத்து எழும்பி இன்னுமொரு டெஸ்ட் மேட்சை பார்த்து ரசிப்போம்.
தில்லையம்பலம் தரணிதரன்
05.01.2021