சஹாரின் போராட்டம் வீண்; இந்தியாவை ஒயிட் வாஷ் செய்தது தென் ஆப்பிரிக்கா
தென் ஆப்பிரிக்கா – இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கேப்டவுனில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீச தீர்மானித்தார்.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் ஜே மாலன், ஐடன் மார்கரம், டெம்பா பவுமா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த குயின்டன் டி காக் – வெண்டர் டூசென் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் டி காக் தனது 17ஆவது ஒருநாள் சதத்தைப் பதிவுசெய்ய, வெண்டர் டுசெனும் அரைசதம் கடந்தார்.
பின் 124 ரன்களில் டி காக்கும், 52 ரன்னில் வெண்டர் டுசெனும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த டேவிட் மில்லர் தனது பங்கிற்கு 39 ரன்களைச் சேர்த்தார்.
இதனால் 49. 5 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 287 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அதன்பின் இலக்கை துரத்திய இந்திய அணியில் கேப்டன் ராகுல் 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த விராட் கோலி – ஷிகர் தவான் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் இருவரும் அரைசதம் கடந்தனர். அதன்பின் 61 ரன்னில் ஷிகர் தவான் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ரிஷப் பந்த் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதையடுத்து விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ஸ்ரேயாஸ் ஐயர். ஒரு கட்டத்தில் இந்திய அணி எளிதாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விராட் கோலி 65 ரன்னிலும், ஸ்ரேயாஸ் ஐயர் 26 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவும் 39 ரன்னில் விக்கெட்டை இழக்க இந்திய அணியின் தோல்வி உறுதியானது. ஆனால் அடுத்து களமிறங்கிய தீபக் சஹார் அபாரமாக விளையாடி 30 பந்துகளில் அரைசதம் கடந்து அணிக்கு நம்பிக்கையளித்தர்.
அதன்பின் 54 ரன்களை எடுத்திருந்த தீபக் சஹார் இங்கிடி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து 12 ரன்கள் எடுத்திருந்த பும்ராவும் ஆட்டமிழந்தார்.
இதனால் இந்திய அணி 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 283 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் லுங்கி இங்கிடி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் இந்திய அணியை ஒருநாள் தொடரில் ஒயிட் வாஷ் செய்தது.
#Abdh