IPL ஆதிக்கத்துடன் ஆரம்பித்த ராஜஸ்தானின் வெற்றிப்பயணம்…!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின.

புனே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 55 ரன்களும், தேவ்தட் படிக்கல் 41 ரன்களும் எடுத்தனர்.

இதனையடுத்து 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கிய ஹைதராபாத் அணி, பேட்டிங்கிலும் ராஜஸ்தான் அணியை சமாளிக்க முடியாமல் தடுமாறியது.
அந்த அணியின் முதல் ஐந்து வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களை கூட தாண்டாமல் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியதால், ஹைதராபாத் அணி 37 ரன்களுக்கே ஐந்து விக்கெட்டுகளை இழந்தது.

ஐந்தாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய மார்க்ரம் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 41 பந்துகளில் 57 ரன்களும், அதிரடியாக ஆடிய வாசிங்டன் சுந்தர் 14 பந்துகளில் 40 ரன்களும் எடுத்து கொடுத்தாலும் மற்ற வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் மட்டுமே எடுத்த ஹைதராபாத் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்துள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிகபட்சமாக யுஸ்வேந்திர சாஹல் 3 விக்கெட்டுகளையும், டிரண்ட் பவுல்ட் மற்றும் பிரசீத் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

#Abdh