இந்தியன் பிரீமியர் லீக் (IPL) க்கான மாற்று வீரர்கள் பட்டியலில் இலங்கை ஆல்-ரவுண்டர் சாமிகா கருணாரத்னவின் பெயரைக் காணாதது குழப்பமாக இருப்பதாக சர்வதேச கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே தெரிவித்துள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கடந்த வாரம் இலங்கை கிரிக்கெட் வீரர்களான வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோரை மாற்று வீரர்களாக ஒப்பந்தம் செய்தது.
இலங்கைக்கான இந்திய சுற்றுப்பயணத்தின் போது சாமிக கருணாரத்னவின் செயல்திறனைப் பாராட்டிய போக்லே, ஐபிஎல்லின் மீதமுள்ள பதிப்பிற்கு சாமிகா கருணாரத்ன சேர்கப்படாமை குறித்து தனது ஆச்சரியத்தை ட்வீட் மூலம் வெளியிட்டுள்ளார்.
ஐபிஎல் போட்டி விதிகளின்படி சாமிகா கருணாரத்ன இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்காததால் இந்த ஆண்டு போட்டிகளில் விளையாட முடியாது.
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகள் கொண்ட தொடரின்போது சாமிகவினுடைய துடுப்பாட்டம், பந்துவீச்சு என்று சகல துறைகளிலும் அவர் அதிகமானவர்களுடைய பார்வையை பெற்றிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.
அதுவும் புவனேஸ்வர் குமார் உடைய பந்துவீச்சை அவர் இறுதி ஓவர்களில், டெத் ஓவர்களில் எதிர்கொண்ட விதமும் அவருடைய பந்துகளை சிக்சருக்கு அனுப்பியமையும் அதிகமான ரசிகர்களை கவர்ந்திழுத்த நிலையிலேயே ஹர்ஷா போக்லே இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
ஐபிசி இருபது -20 கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு முன்னதாக ஐபிஎல் செப்டம்பர் பிற்பகுதியில் துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற ஏற்பாடாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.